இன்று கூடவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர்: இடம் பெறவுள்ள முக்கிய விடயங்கள்
கூட்டத்தொடர்
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடர் இன்று (3) அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
அரசியலமைப்பின் 33வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய, அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் 10.30க்கு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இதற்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் அதிபர் தலைமையில் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படும்.
முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை
அதிபர் நாடாளுமன்றத்துக்கு வருகைதரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அவர் வழங்கிய ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய மரியாதை வேட்டுக்கள் தீர்த்தல் மற்றும் வாகனத் தொடரணி என்பன இடம்பெறாது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், அதிபரை வரவேற்பதற்காக நாடாளுமன்ற முன்றலில் முப்படையினரும் அணிவகுப்பு மரியாதையளிக்கவுள்ளனர்.
இதன்போது அதிபரின் கொடி ஏற்றப்படாது என்பதுடன், தேசியக் கொடி மாத்திரம் ஏற்றிவைக்கப்படும்.
விசேட விருந்தினர்களின் வருகை
இன்று முற்பகல் 9.30 மணிக்கு விசேட விருந்தினர்களின் வருகை இடம்பெறவிருப்பதுடன், அதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் வருகை தருவர்.
அதனைத் தொடர்ந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் வருகையும், அதன் பின்னர் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வருகையும், அதனைத் தொடர்ந்து அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வருகையும் இடம்பெறும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவும், நாடாளுமன்ற கட்டடத்தின் பிரதான நுழைவாயிலின் படிக்கட்டுக்கு அருகில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பார்கள்.
அங்கு முப்படையினர், அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து, படைக்கலசேவிதர், பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல, சபாநாயகர், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோரினால் அதிபர் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்படுவார்.
நாடாளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கொழும்பு தேவிபாலிகா வித்தியாலய மாணவியர் ஜயமங்கல கீதம் இசைக்கவுள்ளனர்.
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதை
அதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள அதிபர், முற்பகல் 10.25 வரை அங்கிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து பாராம்பரியத்துக்கு அமையப் பிரதிப் படைக்கல சேவிதர், செங்கோலைக் கையில் தாங்கியவாறு படைக்கல சேவிதர், அதிபர், சபாநாயகர், செயலாளர் குழு மற்றும் உதவிப் படைக்கல சேவிதர் என்ற வரிசைப்படி அணிவகுத்து சபா மண்டபத்துக்குள் செல்வர்.
சபைக்குள் நுழையும்போது உதவி படைக்கல சேவிதர், அதிபர் வருகையை அறிவித்ததும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து நிற்பது பாரம்பரியமாக இடம்பெறும்.
சபா மண்டபத்துக்கு அழைத்துவரப்படும், அதிபர் அங்கிராசனத்தில் அமர்ந்து சபைக்குத் தலைமை தாங்குவார். இம்முறை அதிபரின் ஆசனத்தில் அதிபருடைய இலட்சினைக்குப் பதிலாக, அரசாங்கத்தின் இலட்சினை பொருத்தப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.
இதன்போது சபாநாயகர், நாடாளுமன்ற குழுநிலையில் அமரும் கீழ் பகுதியிலுள்ள ஆசனத்தில் செயலாளர் குழுவுடன் அமர்ந்திருப்பார். இதனைத் தொடர்ந்து அதிபரால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டு, சபை ஒத்திவைக்கப்படும்.
கலந்து கொள்ளவுள்ள முக்கியஸ்தர்கள்
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கும் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிபர் மற்றும் முதற்பெண்மணி ஆகியோர் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறும்போதும் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்படும்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் அதிபர், முன்னாள் பிரதமர்கள், பிரதம நீதியரசர், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டமா அதிபர், பாதுகாப்புச் செயலாளர், முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட விசேட விருந்தினர்கள் கலந்துகொள்ளவிருப்பதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாவது கூட்டத்தொடரை கடந்த ஜூலை 28 ஆம் திகதி நள்ளிரவு முதல் முடிவுறுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளியிடப்பட்டது.
முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடர்
அதற்கமைய, கடந்த ஜூலை 28 ஆம் திகதிநள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அரசியலமைப்பின் 70 (1) உறுப்புரைக்கு அமைய அதிபருக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கு அமைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
இதேவேளை, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்படும்போது நாடாளுமன்றத்தினால் முறையாக பரிசீலனை செய்யப்படாத வினாக்கள் மற்றும் பிரேரணைகள் இரத்தாவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அவை தொடர்பில் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன் நாடாளுமன்ற இணைப்புக் குழுக்கள், உயர் பதவிகள் பற்றிய குழு மற்றும் விசேட குழுக்கள் தவிர்ந்த ஏனைய குழுக்கள் புதிய கூட்டத்தொடரில் மீண்டும் புதிதாக நியமிக்கப்பட வேண்டும்.
கடந்த 2022 ஜனவரி 18ஆம் திகதி முதல் ஜூலை 28ஆம் திகதி வரை ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் காணப்பட்டதுடன், இக்காலப் பகுதியில் 48 நாட்கள் நாடாளுமன்றம் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
