பொதுஜன பெரமுனவிலிருந்து முக்கிய பிரமுகர் உட்பட பலர் எதிரணியில்!
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகித்த 13 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்துள்ளனர்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு எதிரணியில் இணைந்துள்ளனர்.
இதன்படி, பேராசிரியர். ஜி.எல். பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமன, பேராசிரியர் சரித்த ஹேரத், கலாநிதி நாலக்க கொடஹேவா, குணபால ரத்ணசேகர, கலாநிதி உபுல் கலப்பத்தி, திலக் ராஜபக்ச, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கே.பி.எஸ் குமாரசிறி மற்றும் லலித் எல்லாவல ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக எதிர்க்கட்சியில் அமரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த மாற்றம் தொடர்பில் அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், இன்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு மக்களால் முடியும்
இன்று நாடாளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
இதன்போது, விசேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“கடந்த காலங்களைப் போன்று நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கான சக்தி மக்களிடம் உண்டென நம்புகிறேன். அந்த காலங்களில் மக்கள் கருத்துக்கு செவிசாய்க்கும் நாடாளுமன்றம் ஒன்று இருந்தது.
நாட்டின் பொது கருத்துக்கும் நாடாளுமன்றின் நிலைப்பாட்டுக்கும் பரஸ்பர வேறுபாடு உள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையிலும் சிக்கலை ஏற்படுத்தும்.
மக்கள் விரும்பும் நாடாளுமன்றத்தை உருவாக்க வாய்ப்பளிக்க வேண்டும்
மக்கள் எம்மிடம் எதனையும் கோரவில்லை. எமது ஆட்சி காலத்தில் மக்களுக்கான சரியான வேலைத்திட்டங்களை நாமே முன்வைத்தோம். அதன் பிரதிபலிப்பாக எமக்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.
எனினும், ஆளும் கட்சியின் சிலரது செயற்பாடுகளால் இன்று அது தலைகீழாக மாறியுள்ளது. இன்று மக்கள் விரும்பும் ஒரு நாடாளுமன்றத்தை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
மக்களுக்கான வாக்குரிமை மறுக்கப்படுவது மிக பாரதூரமானதாகும். எனவே, இவ்வாறானதொரு நிலைமையில் எமது கட்சியின் சில உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் சுயாதீன உறுப்பினர்களாக அமர தீர்மானித்துள்ளோம்.
எவ்வாறாயினும், மக்களுக்கு நன்மை பயக்கும் வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படுமாயின் அதற்கு தராளமாக எமது ஆதரவை வழங்குவோம்” எனவும் தெரிவித்துள்ளார்.