மிஸ்டர் அசுத்தத்துடன் எப்படி மிஸ்டர் சுத்தம் இணைந்து செயற்படமுடியும்- ரணிலிடம் நக்கலாக பேசிய துஷார!
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மிஸ்டர் கிளீன்( சுத்தமானவர்) என்றும், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை மிஸ்டர் டேர்ட்டி (அசுத்தமானவர்) என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மிஸ்டர் க்ளீன், மிஸ்டர் டேர்ட்டியுடன் இணைந்து செயற்பட முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சுத்தமும் அசுத்தமும் எவ்வாறு இணைந்து செயற்படமுடியும்
கப்பம் பெற்றமை தொடர்பில் நீதிமன்றத்தினால், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ள அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் பிரசன்ன ரணதுங்கவுடன் எவ்வாறு செயற்படமுடியும் எனவும் ரணிலிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க,
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளபோதும் அது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீட்டை செய்யமுடியும். இந்த மேன்முறையீட்டின் போது அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால், தனது பக்கத்தில் இருக்கும் ஆசனத்தில் அவர் அமரமுடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் தவறான செயற்பாடு
அத்துடன் ஏற்கனவே தான் ஆட்சியில் இருந்த போது, நீதிமன்றில் தண்டனை பெற்றவர்களுடன் அமர்ந்திருந்த பழக்கம் தனக்கு இருப்பதாகவும் ரணில் தெரிவித்தார். இதேவேளை மல்வானை வீடு தொடர்பில், பசில் ராஜபக்ச மீதான குற்றச்சாட்டு, நீக்கப்பட்டுள்ளமைக்கு பின்னால், சட்டமா அதிபர் திணைக்களத்தின் தவறான செயற்பாடுகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டார்.
எனவே இந்த விடயத்தில் பசில் ராஜபக்சவின் மீது மீண்டும் மேன்முறையீடு செய்யப்படுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, அது தொடர்பில் சட்டத்தில் இடமிருந்தால், சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டை மேற்கொள்ளும் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
