ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான முக்கிய நகர்வு - ரணில் விடுத்துள்ள பணிப்புரை!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சிறிலங்கா நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான நகர்வுகள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், அதிபரின் பொதுமன்னிப்பு தொடர்பான ஆவணங்களில் ரஞ்சன் ராமநாயக்க இன்று கையொப்பமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்காவின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி சிறிலங்கா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
கையெழுத்திட்ட ரஞ்சன்
பொதுமன்னிப்பு தொடர்பில் ரஞ்சன் ராமநாயக்கவின் சட்டத்தரணிகள் ஊடாக தயாரிக்கப்பட்ட ஆவணத்திலேயே அவர் கையெழுத்திட்டுள்ளார் என சட்டத்தரணி தினேஷ் விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அண்மையில் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு அமைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.