மக்களின் கண்களைக் கட்டி அரசியல் செய்யும் அரசாங்கம்!
பொது மக்களின் பணத்தில் கண்காட்சிகளை நடத்துவதற்கு பதிலாக, முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
பொதுக் கூட்டங்களை நடத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை மூடிமறைக்க முடியாது. இதுவரை நாங்கள் அரசியல் செய்யவில்லை, நாட்டை நிர்வாகம் செய்ததாகவும் தற்போது அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளதாகவும் அரசாங்கம் கூறுகிறது.
எந்த அரசியலையும் செய்துகொள்ளுங்கள் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அரசாங்கம் மக்களின் பணத்தில் அரசியல் செய்கிறது. பொதுக் கூட்டங்களை நடத்தி அரசியலை நடத்துகிறது.
அப்பாவி மக்களின் கண்ணீரை சுரண்டி சாப்பிட்டு பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்துள்ளனர். கூட்டங்களை நடத்தி மக்களின் கண்களை கட்டி ஏமாற்ற அரசாங்கம் தயாராகி வருகிறது.
இவற்றை நிறுத்தி விட்டு தேர்தலுக்கு வாருங்கள். எந்த நேரத்திலும் நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். அப்போது அரசாங்கத்திற்கு ஆதரவான அலை இருக்கின்றதா அல்லது எதிரான அலை இருக்கின்றதா என்பதை காண முடியும் எனவும் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.
