பீரிஸை முற்று முழுதாக ஓரம் கட்டிய பொதுஜன பெரமுன!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தவிசாளராக கலாநிதி உத்துரவல தம்மரத்தன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த பொதுக் கூட்டம் தொடர்பான ஆலோசனைகளை ஐந்து நாட்களுக்குள் தமக்கு அறிவிக்குமாறு பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கு, நாம் எழுத்து மூலம் அறிவித்திருந்தோம்.
புதிய தவிசாளர்
இந்த அறிவிப்பை நிராகரித்த ஜி.எல்.பீரிஸ், பொது கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் கூட்டத்தின் அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் ஆகியவற்றின் செல்லுபடியாகும் தன்மையை நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பொதுக் கூட்டத்தில் ஜி.எல்.பீரிஸ் பங்கேற்றக்காத காரணத்தால் கட்சியின் புதிய தவிசாளராக கலாநிதி. உத்துரவல தம்மரத்தன தேரர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பதிலளிக்காத பீரிஸ்
சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை உத்துரவல தம்மரத்தன தேரர் கட்சியின் உறுப்பினராக செயல்படுவதோடு, ஆரம்ப காலகட்டத்தில் தவிசாளராக பணியாற்றியிருந்தார்.
இந்த பின்னணியில், உத்துரவல தம்மரத்தன தேரரை மீண்டும் தவிசாளராக நியமிக்குமாறு பல முன்மொழிவுகள் கிடைக்கப் பெற்ற நிலையில், அவற்றை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது” எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.
