ரணிலுக்கு இது மிகப்பெரும் சவால்! நம்பிக்கை இழந்த சர்வதேசம் - சந்தியா எக்னலிகொட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கு சர்வதேச ரீதியாக நம்பகமான பொறிமுறையை அறிமுகப்படுத்துவது அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலான விடயம் என்று காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் இலங்கைப் பொறிமுறையில் நம்பிக்கை இழந்து வருவதாகத் தெரிவித்தார்.
ஆயுதப் போராட்டங்கள் அல்லது அரசியல் மோதல்களில் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர். அவை இறுதிச் சடங்குகள் கூட செய்யாமல் புதைக்கப்பட்டன. அதேபோல் இலங்கையின் உள்நாட்டுப் போரில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் என்று உரிமைகளுக்கான ஊடகவியலாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய சந்தியா எக்னலிகொட குறிப்பிட்டார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததும் அந்த அலுவலகத்துக்கு தமக்கு நெருக்கமானவர்களை நியமித்ததால் அதன் நம்பகத்தன்மை இழக்கப்பட்டது. அத்துடன் இந்த அலுவலகத்தின் மீது சர்வதேச சமூகமும் நம்பிக்கையை இழந்துள்ளது.
எனவே இந்த சவாலை ஏற்றுக்கொண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பாதிக்கப்பட்ட குடும்பங்களைஇ குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ளவர்களை விசாரித்து நீதியை நிறைவேற்ற நம்பகமான பொறிமுறையை நிறுவுமாறு அதிபர் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுப்பதாக சந்தியா குறிப்பிட்டார்.
காணாமற்போன கணவன் அல்லது மகனின் புகைப்படத்தை பெண்கள் எப்போதும் சுமந்து நீதி கோரி நிற்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். உரிமைகளுக்கான ஊடகவியலாளர்களின் தலைவர் கே.சஞ்சீவ, உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் 20க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் அவர்களில் எவருக்கும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, கீத் நொயார், பிரகீத் எக்னலிகொட, பொத்தல ஜயந்த, லால் ஹேமந்த மாவலகே, உபாலி தென்கோன், டி.எம்.ஜி.சந்திரசேகர, தர்மலிங்கம் சிவராம் மற்றும் சம்பத் லக்மால் டி சில்வா போன்றவர்கள் கொல்லப்பட்டோ, கடத்தப்பட்டோ அல்லது தாக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
ரணில் விக்ரமசிங்க ஒரு ஜனநாயகத் தலைவர் என்று அறியப்பட்டவர் என்றும் தனது நண்பரான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக புதிய விசாரணையை தொடங்குவதன் மூலம் அதனை அவர் நிரூபிக்கக்கூடிய சந்தர்ப்பம் இது என்றும் சஞ்சீவ கூறினார்.

