சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் - ரவிகரன் இரங்கல்
ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த மூத்த அரசியல் செயற்பாட்டாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், தேசிய அபிலாசைகள் மற்றும் நீதிக்கான போராட்டங்களில் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் எம்.கே. சிவாஜிலிங்கம்.
ஆழ்ந்த இரங்கல்
தமிழ் மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து, பல்வேறு அரசியல் சூழல்களிலும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற அவரது பங்களிப்புகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.

அவரது மறைவு தமிழ் அரசியல் சமூகத்திற்கும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அரசியல் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |