மீண்டும் மகிந்தவின் தலையீடு - பசில் மகிந்தவின் சதித்திட்டத்தால் மீண்டும் தென்னிலங்கையில் குழப்பம்!
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மௌனமாக இருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தலையீடு செய்ததால், பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை ஆதரவைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
21வது திருத்தச் சட்டத்திற்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியாது.
புதிய திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்கும் பிரேரணை உள்ளடக்கப்பட வேண்டுமென மகிந்த ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தார்.
புதிய திருத்தத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை இல்லாதொழிக்கும் பிரேரணை உள்ளடக்கப்பட்டால் அது சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என அரசியலமைப்பு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை அடைவதற்குத் தேவையான அடிப்படை மாற்றங்களை உள்ளடக்கியதாக தெளிவாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், மகிந்த ராஜபக்சவின் எதிர்ப்பின் பின்னணியில் முழு செயற்பாட்டையும் குழப்பும் யோசனை இருப்பதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகிந்த, பசிலின் கூட்டு செயற்பாடு 21வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பசில் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்கள் தற்போது செயற்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மகிந்த ராஜபகசவின் தலையீட்டினால் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் உட்பட 21 பேருக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
