ரணில் வீசிய கொழுக்கி..!
கனடாவில் உள்ள நண்பர் ஒருவர் கேட்டார்….”தாயகத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட மூன்று கட்சிகளையே எங்களால் ஒருங்கிணைக்க முடியவில்லை.
இந்நிலையில்,புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும் நபர்களையும் ஒன்றிணைத்து தாயகத்தில் முதலீடு செய்வது நடக்கக்கூடிய காரியமா ? “என்று.
ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் உள்ள சில அமைப்புக்கள் மற்றும் நபர்களின் மீது தடையை நீக்கியது தொடர்பில் நான் எழுதிய ஒரு கட்டுரை தொடர்பாகவே அவர் அவ்வாறு கேட்டிருந்தார்.
ஆனால் புலம்பெயர்ந்த தமிழ்ப் பரப்பு எனப்படுவது உலகம் முழுவதும் பரந்து விரிந்து சிதறிக்கிடக்கிறது.அது வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறது. வெவ்வேறு பண்பாடுகளில் வெவ்வேறு பொருளாதாரக் கட்டமைப்புகளில் வெவ்வேறு நிலையான பொருளாதார நலன்களோடு காணப்படுகிறது.
தாயகத்தை நோக்கிய பிரிவேக்கம் என்ற ஒன்றைத்தவிர வேறு எதுவும் அந்த அமைப்புகளுக்கிடையில் இப்பொழுது பொதுவானதாக இல்லை. கடந்த 13ஆண்டுகளாக ஐக்கியப்பட முடியாத,ஐக்கியப்படுத்த யாருமில்லாத ஒரு புலம்பெயர் சமூகமாக தமிழ் சமூகம் காணப்படுகிறது.
இலங்கை அரசுக்கு தொடர் நெருக்கடி கொடுத்த சமூகம்
கடந்த 13 ஆண்டுகளில் ஐநாவை நோக்கியும் உலகப்பொது மன்றங்களை நோக்கியும் நீதிக்காக அயராது உழைத்த ஒரு சமூகமாகவும்,இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக நெருக்கடியைக் கொடுத்த ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது.
தாயகத்தில் இருக்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் தனிநபர்களுக்கும் நிதியை அள்ளி வழங்கிய காசு காய்க்கும் மரமாகவும் அது காணப்படுகிறது.
உலகின் மிகவும் கவர்ச்சியான செயல்திறன்மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக அது தன்னை வெளிக்காட்டியிருக்கிறது. ஆனாலும் மிகவும் சிதறிப்போன,கூட்டுச் செயற்பாடு இல்லாத ஒரு புலம்பெயர் சமூகமாகவும் அது தன்னை நிரூபித்திருக்கிறது.கடந்த 13 ஆண்டுகளாக ஜெனீவாவில் பொருத்தமான வெற்றிகளைப் பெறத் தவறியதற்கு அதுவும் ஒரு காரணமா?
தாயகத்தில் இயங்கும் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் நிதி உதவ புரியும் அதேநேரம் அந்த நிதி உதவிதான் கட்சிகளையும் செயற்பாட்டாளர்களையும் பிரித்து வைத்திருக்கிறது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அந்த நிதி உதவிகளால் தாயகத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை.
அல்லது மறுவளமாகச் சொன்னால் புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் எவ்வளவுதான் காசு கொடுத்தாலும் அந்த காசினால் தாயகத்தில் கட்சிகளுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையே ஐக்கியத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் அவ்வாறு ஐக்கியம் ஏற்படாமைக்கு மேற்படி தனித்தனியான தூர இயக்கி-ரிமோட் கண்ட்ரோல்- உதவியும் ஒரு காரணம் எனலாம்.
இவ்வாறான கூட்டுச் செயற்பாடற்ற ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தை நோக்கி இலங்கை அரசாங்கம் கொழுக்கிகளை வீசியிருக்கிறது என்பதே உண்மை. தங்களுக்கிடையே ஒற்றுமைப்படாத ஒரு சமூகம் இந்த கொழுக்கிகளில் சிக்கி உதிரிகளாகத் தன் வலையில் வந்து விழும் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது.
அவ்வாறு சிந்திக்கத்தேவையான கொழுத்த அனுபவம் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு.கடந்த 2015ல் ஆட்சி மாற்றத்தின் பின் அவர் அதைச் செய்தார்.
ஆனால் ஜெனிவாவை கையாள்வது, புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் பலத்தை உடைப்பது போன்ற நிகழ்ச்சிநிரல்கள் இருந்தன.அந்த நிகழ்ச்சிநிரலை முன்வைத்து குறிப்பிடத்தக்களவுக்கு ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் முன்நகரக் கூடியதாகவும் இருந்தது.
குறிப்பாக ஐநாவில் நிலைமாறு கால நீதியை நோக்கி புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியை ஈர்த்து எடுப்பதில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியிருந்தது.தாயகத்தில் கூட்டமைப்பும் அப்பொழுது அந்த நிகழ்ச்சி நிரலிற்கு உட்பட்டு நிலை மாறுகால நீதியை ஆதரித்தது. இதனால் கூட்டமைப்பு மற்றும் தடை நீக்கப்பட்ட புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் போன்றன இணைந்து நிலைமாறு காலை நீதிக்குரிய நிகழ்ச்சிநிரலை பலப்படுத்தின.
இதுவிடயத்தில் தடைநீக்கப்பட்ட தமிழ் புலம்பெயர் அமைப்புகள் சில பெருமளவுக்கு தாம் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்களின் நிலைமாறு கால நீதிக்கான நிகழ்ச்சி நிரலை அதிகபட்சம் முன்னெடுத்தன.அக்காலகட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழ்அமைப்புகள் நிலைமாறு கால நீதியா ?அல்லது பரிகார ரீதியா ? என்று ஜெனிவாவில்,தங்களுக்கிடையே பிரிந்துநிற்கும் ஒரு நிலை தோற்றுவிக்கப்பட்டது.
அல்லது புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகங்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கங்கள் ஐநாவில் முன்னெடுத்த தமிழர் தொடர்பான நிகழ்ச்சிநிரலைப் பெருமளவுக்குப் பிரதிபலித்த தமிழ் அமைப்புகள்,அல்லது பிரதிபலிக்க மறுத்த தமிழ்அமைப்புகள் என்று புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் மத்தியில் பல்வேறு நிலைபாடுகள் தோற்றுவிக்கப்பட்டன.
மீண்டும் ரணில்
இப்பொழுது மறுபடியும் ரணில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் தன்னுடைய நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சி காலத்தில் முன்னெடுத்த அதே நிகழ்ச்சிநிரலை அதாவது தமிழ் புலம்பெயர்ந்த அமைப்புகளின் உதவியோடு ஜெனிவாவைக் கையாள்வது என்ற நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கக்கூடும்.
அதைவிட மேலதிகமாக நாட்டில் இப்பொழுது நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு புலம்பெயர் தமிழ் முதலீடுகள் என்ற நோக்கு நிலையில் இருந்தும் செயல்பட முடியும்.
இப்பொழுது வந்திருக்கும் தடைநீக்கம் ரணில் விக்ரமசிங்கவின் முன்னெடுப்பு மட்டுமல்ல.அது ஏற்கனவே கோதாபயவின் காலத்தில் தொடங்கப்பட்டது.
ரணில் அதை முடித்து வைத்திருக்கிறார்.கோத்தாவும் ரணிலைப்போல முன்கண்ட இரண்டு நிகழ்ச்சி நிரல்களை மனதில் வைத்திருந்தார். ஒன்று ஜெனிவாவைக் கையாள்வது, இரண்டு பொருளாதார நெருக்கடியைக் கையாள்வது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஜெனிவாவைக் கையாள்வது என்பது புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தை பிரித்துக் கையாள்வதன் மூலம்,புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அனைத்துலக அரங்கில் முன்னெடுத்து வரும் நீதிக்கான கோரிக்கைகளை பலவீனப்படுத்துவதுதான்.
தடை நீக்கப்பட்டால் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் நாட்டிற்குள் வந்து போகும் நிலைமை திறக்கப்படும்.அவர்கள் தாயக கள யதார்த்தத்தோடு நெருங்கி உறவாடும் ஒரு நிலைமை தோன்றும்.
இவ்வாறு தாயகத்துக்கு வந்து போகக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும் பொழுது, அந்த வாய்ப்புகளை எப்படி பாதுகாப்பது என்றுதான் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த தமிழர்கள் சிந்திப்பார்கள்.தாயகத்துக்கு வந்துபோகும் நிலைமைகளைப் பாதுகாப்பது என்பது அதன் தக்கபூர்வ விளைவாக தாயகத்துக்கு வெளியே அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் தீவிரத்தை குறைப்பதுதான்.
அரசாங்கத்துக்கு எதிராக நீதியைக் கோரும் போராட்டத்தின் தீவிரத்தை குறைப்பதுதான்.எனவே தடை நீக்கத்தின்மூலம் வெளியரங்கில் தனக்கு எதிராகச் செயல்படக்கூடிய தமிழ் அமைப்புகள் மற்றும் நபர்களின் தீவிரத்தை அரசாங்கம் குறைக்க முடியும். இது கடந்த நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட ஆட்சிக்காலத்திலும் அவதானிக்கப்பட்டது.
ஏன் கடந்த சில ஆண்டுகளாகவும் அதைக் காணமுடிகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஜெனிவாவில் ஒப்பீட்டுளவில் குறைந்தளவு பக்க நிகழ்வுகளே இடம்பெற்றதாக ஒரு செயற்பாட்டாளர் தெரிவித்தார்.அதற்குக் காரணம் பக்க நிகழ்வுகளுக்கு நிதியுதவி புரியும் ஒரு தமிழ் பெருவணிக நிறுவனம் அந்த நிதி உதவியை குறைத்தமைதான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏனெனில் அந்த பெருவணிக நிறுவனம் தாயகத்தில் முதலீடுகளை செய்ய தொடங்கிவிட்டது.குறிப்பாக தென்னிலங்கையில் வங்குரோத்தான ஒரு சிங்கள கொம்பனியை அது விலைக்கு வாங்கியிருக்கிறது.தாயகத்தில் தனது முதலீடுகளை பத்திரமாக முன்னெடுப்பதற்கு அந்த நிறுவனம் அரசாங்கத்துக்கு எதிரான அதன் போக்கில் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டியுள்ளது.
அதன் விளைவுதான் கடந்த ஆண்டு பக்க நிகழ்வுகளில் அந்த நிறுவனத்தின் நிதிப் பங்களிப்பு குறைவாக காணப்பட்டமையும் என்று மேற்படி செயற்பாட்டாளர் தெரிவித்தார்.
இதைத்தான் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. தடை நீக்கப்பட்ட அமைப்புகளும் நபர்களும் புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பில் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் தீவிரம் குறையும். இது முதலாவது இலக்கு. இரண்டாவது இலக்கு முதலீடு.
ரணிலின் புலம்பெயர் நிதியம்
கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய பொழுது ரணில் விக்ரமசிங்க “புலம்பெயர் நிதியம்” ஒன்றை உருவாக்குவது தொடர்பாக யோசனையை முன்வைத்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு ஒருங்கிணைப்பு மையமாக தொழிற்படுகின்ற வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கான அலுவலகமொன்றினை ஸ்தாபிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அதாவது புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் என்ற பொதுவான ஒரு பதத்தினை அவர் பயன்படுத்துகின்றார்.தமிழ் முதலீடு என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாயகத்தில் முதலீடு செய்யும்பொழுது அதன் இனரீதியான பரிமாணத்தை அகற்றிவிட்டு வெறும் முதலீடாகச் செய்வது சரியா? அல்லது ஒரு தேசமாக சிந்தித்து தாயகத்தில் தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் முதலீடு செய்வது சரியா?
புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் உதிரிகளாக வந்து தாயகத்தில் முதலீடு செய்தால் என்ன நடக்கும் ?அது வழமையான திறந்த சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் நிகழும் ஒரு முதலீடு என்ற பொருளாதார பரிமாணத்தைத்தான் அதிகமாக கொண்டிருக்கும்.மாறாக அதற்கு தாயகம் நோக்கிய தமிழ்முதலீடு என்ற இனரீதியிலான பரிமாணமும் பண்பாட்டு ரீதியிலான பரிமாணமும் அல்லது தமிழ்த்தேசிய நோக்கு நிலையிலான பரிமாணமும் குறைவாகவே இருக்கும்.
புலம்பெயர்ந்த தமிழ் முதலீடுகளுக்கு எப்பொழுது தமிழ்த்தேசிய பரிமாணம் அதிகரிக்கிறது என்றால் புலம்பெயர்ந்த தமிழ் முதலீட்டாளர்கள் ஒரு தேசமாக சிந்தித்து முடிவெடுக்கும் போதுதான்.
ஒரு தேசமாக சிந்திப்பது என்றால் என்ன? ஒரு மிகப்பெரிய மக்கள்திரளாகச் சிந்திப்பதுதான். தாயகத்துக்கு வெளியே அவ்வாறு சிந்திப்பது எப்படி? தாயகத்தில் தமிழ்மக்களை ஒரு பெரிய தேசமாகக் கட்டியெழுப்புவது என்ற அடிப்படையில் முதலிடுவதுதான்.அதாவது தாயகத்தில் தேசநிர்மாணத்தின் ஒரு பகுதியாக முதலீடு திட்டமிடப்பட வேண்டும்.
மாறாக தனித்தனி வள்ளல்களின் உதவிகளோ,அல்லது தனித்தனி முதலாளிகளின் உதிரியான முதலீடுகளோ,தாயகத்தை கட்டியெழுப்புவது என்ற சமூகப்பொருளாதார அரசியல் பரிமாணத்தை கொண்டிருக்க போவதில்லை.
எனவே இப்பொழுது இக்கட்டுரை தொடங்கிய இடத்துக்கே வரலாம். எனது நண்பர் கேட்டது போல புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் முதலீட்டை ஒரு கூட்டுச் செயற்பாடாக செய்வதற்கான வாய்ப்புகள் அநேகமாக இல்லை.
புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஒரு தேசமாக சிந்தித்து முதலீடு செய்யப் போவதில்லை என்ற எதிர்பார்ப்பில்தான் அரசாங்கம் இந்தக் கொழுக்கியை வீசியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழ் முதலாளிகள் உதிரிகளாக நாட்டுக்குள் முதலீடு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
அதாவது ரணில் விக்ரமசிங்க புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கி ஒரு பொறியை வைத்திருக்கிறார் என்று பொருள். அந்தப் பொறிக்குள் தமிழ் நிதி உதிரியாக வந்து சிக்குமா?