டக்ளஸ் தேவானந்தாவுக்கு 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவு!
புதிய இணைப்பு
காணாமல் போன துப்பாக்கி தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மேலும் விசாரிக்க குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட டக்ளஸ் தேவானந்தா இன்று (27) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரது தனிப்பட்ட துப்பாக்கி ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினர்களின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நேற்று (26) மாலை சிஐடி அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

2001 ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இலங்கை இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, பின்னர் 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான 'மாகந்துர மதுஷ்' என்பவரின் விசாரணையைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, கம்பஹா நீதிவான் முன்னிலையில் அவர் இன்று (27) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய, கம்பஹா - வெலிவேரிய பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைப்பு
குறித்த துப்பாக்கி, டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டது என ஆரம்பக்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக, டக்ளஸ் தேவானந்தா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று முற்பகல் அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது, குறித்த துப்பாக்கி டக்ளஸ் தேவானந்தாவுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |