அரசியலமைப்பு தொடர்பில் தெளிவில்லாத சஜித்- பகிரங்கமாக சாடிய சுமந்திரன்!
இலங்கையின் பொருளாதாரத்தைவிடவும் புலம்பெயர் தமிழர்களிடம் பண பலம் உள்ளது. எனவே, அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதற்கு அப்பாலான அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமானால் நிச்சயம் உதவி கிட்டும் என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே அவசியம். மாறாக ஆளுநர் வசம் அதிகாரங்கள் இருக்கக்கூடாது. மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகள் வசமே அதிகாரம் இருக்க வேண்டும். அரச தலைவருடனான சந்திப்பின் போது நாம் அரசியல் தீர்வு பற்றியே பேச்சு நடத்தினோம் என கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரசியமைப்பின் பிரகாரம் தற்போது அரச தலைவருக்கான தேர்தலை நடத்த முடியாது. இந்த விடயம் கூட சஜித் பிரேமதாசவுக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வ கட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமை தவறான முடிவாகும். அரசியல் இலாபத்துக்காகவே அந்தக் கட்சி இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“சர்வக்கட்சி மாநாட்டின் போது புலம்பெயர் தமிழர்களின் முதலீடு தொடர்பில் பல தரப்பினரும் கருத்துகளை முன்வைத்தனர். நாமும் அது தொடர்பில் கதைத்தோம்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படுமானால் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயம் உதவுவார்கள் என சுட்டிக்காட்டினேன். புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுப்பதற்கான பாலமாக இருப்பதற்கு நாம் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.
