இன்று மாலையே தீர்மானம் - தாயகம் மற்றும் மலையக கட்சிகளின் அறிவிப்பு!
சிறிலங்காவின் புதிய அதிபர் தெரிவிற்கான வேட்பாளர்களாக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்று தமது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக வடக்கு மற்றும் மலையக கட்சிகள் தெரிவித்துள்ளன.
அந்த வகையில், எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் இன்றைய தினத்திற்குள் அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
போட்டியிடும், பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார ஆகியோர் அவர்களது எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் தம்முடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கட்சி உறுப்பினர்களுடன் ஆராய்ந்ததன் பின்னர் இன்றைய தினம் தீர்மானிக்கவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று மாலை இடம்பெறவுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு கூட்டத்தில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அதன் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பனவும் இன்று மாலை தமது தீர்மானங்களை அறிவிக்கவுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
