கோட்டாபயவிற்கு ஹிட்லர் முசோலினி மற்றும் கடாபி போன்றவர்களின் நிலையே - விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
சிறிலங்கா அரச தலைவர், பதவியில் இருந்து விலகாத பட்சத்தில், அடோப் ஹிட்லர், முசோலினி மற்றும் கடாபி போன்றவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையே கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.
ஆயுதப் படையினர் மற்றும் காவல்துறையினருக்கு கூட எந்தவொரு தெரிவும் இன்றி, ஆர்ப்பாட்டகாரர்களுடன் இணைய வேண்டிய சூழலே வரலாற்றில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரச தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அதேவேளை இலங்கைக்கான கணிசமான நிதி உதவியை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரிக்காது என்பது வெளிப்படையான விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சிறிலங்கா அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனவே இது தொடர்பில் அரசாங்கம் உண்மை நிலைமையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல குணவர்த்தன,
அரச தலைவர், பிரதமர் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் ஆகியோர், இலங்கையின் நிதி நெருக்கடிகளை வெற்றிகொள்ளும் வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.
இந்த நிலையில் இது தொடர்பில், நாளைய தினம் நாடாளுமன்றில் தெளிவுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
