பாண் என்ற வார்த்தையைக் கூட உச்சரிக்க முடியாத அளவு அதளபாதாளத்தில் வாழ்க்கைச் செலவு!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தற்போது அம்பலாங்கொடை பொம்மலாட்ட பொம்மையாக மாறியுள்ளதாகவும் அவரை மகிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவினர் மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் ஆட்டுவிப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பொதுச் செயலாளருமான ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“பூவை நசுக்காது தேனை எடுப்பது போல் நாட்டில் வரிகளை அறவிட வேண்டும். ஆனால் அரசாங்கம் தற்போது பால் தரும் பசுவின் மடியை வெட்டி எடுப்பது போல் வரியை அறவிடுகிறது.
கொள்ளையிடப்பட்ட நாட்டு மக்களின் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்வதற்கு பதிலாக மக்களின் வரிச்சுமை அதிகரிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதளபாதாளத்திற்கு சென்றுள்ள ஊழல்
ஒரு லட்சம் ரூபாவுக்கும் மேல் சம்பளம் பெறும் அனைத்து நபர்களிடம் இருந்தும் வரியை அறவிடப் போகிறார்கள். அரசாங்கத்தில் இருக்கும் தற்போதைய ஆட்சியாளர்களின் ஊழல் அதளபாதாளம் வரை சென்றுள்ளது. இதன் காரணமாக இவ்வாறு வரி அறவிடப்படுகிறது.
மக்களின் பணத்தை கொள்ளையிட்டனர். இதனால், நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்று வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில், ஏற்பட்டுள்ள அந்த நஷ்டத்தை ஈடுசெய்ய மக்களிடம் இருந்து பணத்தை வரியாக பெற தீர்மானித்துள்ளனர்.
மக்களால் தற்போது பாண் என்ற வார்த்தையை கூட கூறமுடியவில்லை. அந்த அளவுக்கு வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவானது மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
ஐந்து மடங்காக அதிகரித்துள்ள போக்குவரத்து செலவு
போக்குவரத்து செலவு நான்கு முதல் ஐந்து மடங்காக அதிகரித்துள்ளது. மூன்று வேளை சாப்பிட்டவர்கள் இரண்டு வேளை மட்டுமே சாப்பிடுகின்றனர். இரண்டு வேளை சாப்பிட்டவர்கள் ஒரு வேளை மாத்திரமே சாப்பிடுகின்றனர்.
பிள்ளைகளுக்கு பாடசாலை கல்வி இல்லை. நோயாளிகளுக்கு மருந்தில்லை. சுமார் 20 லட்சம் பேர் தொழில்களை இழந்துள்ளனர்” எனவும் ரஞ்சித் மத்தும பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

