சிறிலங்கா அதிபராக ரணிலின் வடக்கிற்கான முதலாவது பயணம் - எதிர்ப்புப் போராட்டத்தில் உறவுகள்; காவல்துறை குவிப்பு!
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க வவுனியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்க வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்துள்ளார்.
சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் முதன் முறையாக இன்றைய தினம் வடமாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இன்றைய தினம் வவுனியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ரணில், வவுனியாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
அரச உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு
இந்நிலையில் எதிர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. அதேவேளை, ரணிலின் வவுனியா பயணத்தின் முதலாவது நிகழ்வாக வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அரச உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அத்துடன் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் கிராம சேவையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களையும் சந்திக்கவுள்ளார். மேலும் வட மாகாணத்திற்கான அதிபர் நல்லிணக்க செயலகத்தின் இணைப்பு செயலகமொன்றையும் வைரவபுளியங்குளத்தில் திறந்து வைக்கவுள்ளார்.
உறவுகள் போராட்டம்
இவ்வாறான நிலையில் அதிபர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன் அதிபரின் நிகழ்வு இடம்பெறும் பகுதிகளில் தனியார் வகுப்புக்கள் மற்றும் நிகழ்வுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், அதிபர் நாளை 20 ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கும் பயணம் செய்யவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






