கோட்டாபயவின் முன்னாள் செயலாளரின் இரகசிய செயல்பாடுகள் அம்பலம்!
சிறிலங்கா அரச தலைவரின் செயலாளராக பி.பீ.ஜயசுந்தர, பதவி வகித்த காலத்தில் பல அமைச்சுக்களுக்கான செயலாளர்களாக தனக்கு நெருக்கமானவர்களை நியமித்து அவர்கள் ஊடாக அமைச்சர்களை மீறி சென்று அமைச்சுக்களின் நடவடிக்கைகளை கையாண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஜயசுந்தரவுக்கு நெருக்கமான அமைச்சுக்களின் செயலாளர்களை இடமாற்றம் செய்வதற்கான பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அரச தலைவரின் செயலாளராக அவர் பதவி வகித்த காலத்தில் செய்த மற்றும் கூறியவற்றின் பிரதிபலன்களை எதிர்காலத்தில் காண முடியும் என சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சர்களை மீறி அமைச்சுக்களின் செயலாளர்கள் செயற்படுவதாக ஐயசுந்தரவுக்கு எதிராக அமைச்சர்கள், அரச தலைவர் மற்றும் பிரதமரிடம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையும் இதற்கான ஒரு காரணம் எனவும் கூறப்படுகிறது.
அமைச்சர் விமல் வீரவன்ச இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்திருந்தார். பி.பீ. ஜயசுந்தர அரச தலைவரின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேனீர் விருந்தில் அரச தலைவர் மாத்திரமல்லாது, அவரின் ஆலோசகர் லலித் வீரதுங்கவும் கலந்துகொள்ளவில்லை.
அந்த நேரத்தில் அரச தலைவர் லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.