பதவி ஏற்கும் போது ரணிலுக்கு ஏற்பட்ட சங்கடம்
சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்தபோது மின்தடை ஏற்பட்டதாகவும் இது குறித்து விசாரணை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது அதிபராக ரணில் விக்ரமசிங்க இன்று காலை சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
நேரலை
அதன் போது நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அவரது பதவிப்பிரமாணத்தை ரூபவாஹினி தொலைக்காட்சி ஊடாக நேரலையாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதனை ஏனைய தொலைக்காட்சி அலைவரிசைகளில் இணைத்து நேரலை ஒளிபரப்புக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தின் செங்கம்பள விரிப்பில் நடந்து வரும்போது நேரலை ஒளிபரப்பு தடைப்பட்டது.
அதன் பின்னர் பதவிப்பிரமாணம் குறித்த நிகழ்வுகள் நேரலை ஒளிபரப்பு வழங்கப்படவில்லை.
பதவிப் பிரமாணத்தின் போது நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட மின்தடை காரணமாகவே நேரலை ஒளிபரப்பு தடைப்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.
விசாரணைக்கு உத்தரவு
பொதுவாக நாடாளுமன்றத்தில் மின்தடை ஏற்பட்டால் ஜெனரேட்டர் மூலம் இரண்டே நிமிடங்களில் மின்சார விநியோகம் சீர்செய்யப்படுவது வழக்கமாயினும், இன்றைய தினம் பத்து நிமிடங்கள் வரை மின்தடை நீடித்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.