நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டளஸ் அழகப்பெரும - கூட்டமைப்பு பூரண ஆதரவு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிபர் வேட்பாளர் டளஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினர் எழுத்து மூலம் வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதிபர் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19) இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்துரையாடல் இடம்பெற்றது.
சஜித், டளஸ் கலந்துரையாடலில் பங்கேற்பு
இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதிபர் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அதிபர் வேட்பாளர் உள்ளிட்ட சஜித் அணியினர் கூட்டமைப்பிடம் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டளஸ் வெற்றிபெறும் போது நிபந்தனைகள் நிறைவேற்றப்படும்
இதன் அடிப்படையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் டளஸ் அழகப்பெருமவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒருமித்த ஆதரவுடன் அதிபர் வேட்பாளர் டளஸ் அழகப்பெரும வெற்றிபெறும் போது நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பினர் முன் வைத்த நிபந்தனைகள்
இதன் போது கூட்டமைப்பினர் முன் வைத்த நிபந்தனைகளான அரசியல் கைதிகளின் விடுதலை ,காணி அபகரிப்பு, மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும், தொல்பொருள் திணைக்களம் என்ற பெயரில் காணி அபகரிப்பு , உடனடியாக அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக விசாரனைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்,உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.
எனினும் குறித்த கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சஜித் அணியினர் எழுத்து மூலம் வழங்கியுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அதிபர் வேட்பாளர் டளஸ் அழகப்பெருமவுக்கு பூரண ஆதரவு வழங்குவதாக முடிவு எடுத்துள்ளனர்.
