இலங்கையர்களுக்கு உதவும் மிகச் சிறந்த வழிகளை ஆராயும் அமெரிக்க குழு - ரணிலுடன் முக்கிய சந்திப்பு!
சிறிலங்கா பிரதமர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழுக்களிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குழுவினர் நேற்று காலை சிறிலங்காவை வந்தடைந்திருந்தனர். இந்நிலையில், இன்றையதினம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.
ஆசிய திறைசேரிக்கான பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பிரதி உதவி இராஜாங்க செயலாளர் கெல்லி கெய்டர்லின் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று காலை பிரதமரைச் சந்தித்துள்ளனர்.
அவர்கள், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த விஜயத்தின் போது, அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கையர்களுக்கு உதவுவதற்கான மிகச் சிறந்த வழிகளை பிரதிநிதிகள் குழு ஆராயவுள்ளது.
மேலும் இந்த பிரதிநிதிகள் குழு இம்மாதம் 29ஆம் திகதி வரை சிறிலங்காவில் தங்கியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
