மிலேச்சத்தனமான காவல்துறையினரின் செயல் : நீதிக்காக போராட்டம் தொடரும் - ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவர்
நேற்றைய தினம் கல்வி அமைச்சுக்கு உள்ளே அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதோடு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக, இலங்கை அரச ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை அரச ஆசிரியர் சங்கங்கத்தின் உபதலைவர் ஜீவராசா ருபேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“நேற்றைய தினம் கல்வி அமைச்சின் முன்பாக பாளி பல்கலைக்கழகத்தை மீள் ஆரம்பிக்குமாறு கோரி பிக்கு மாணவர்கள் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினாலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மிலேச்சத்தனமான தாக்குதல்

இந்த ஆர்ப்பாட்டத்தினை கலைப்பதற்காக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தனர். அதன் போது எங்களுடைய கல்வி அமைச்சுக்கு உள்ளே நுழைந்து அவர்களை கைது செய்திருந்தார்கள்.
கைது செய்ததன் பிற்பாடு பௌத்த துறவிகளை வாகனத்தில் ஏற்றுகின்ற பொழுது மிலேச்சத்தனமாக தாக்கி இருக்கின்றார்கள்.
இதனை எங்களுடைய கல்வி அமைச்சில் நான்காம் மாடியில் ஆசிரியர் இடமாற்றம் சபையிலே பங்குபற்றிய எங்களது சங்க உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஏனைய சங்க உறுப்பினர்களும் யன்னல் வழியாக உற்றுநோக்கி இருக்கின்றார்கள்
இதன்போது நீதிக்கு புறம்பான செயற்பாடு இடம்பெறுவதனால் அதனை ஒளிப்பதிவு செய்வதற்கான நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டு இருக்கின்றார்கள்.
அடாவடியாக 50ற்கு மேற்பட்ட குழுவினர்

அதன் போது கல்வி அமைச்சுக்குள் அத்துமீறி நுழைந்த காவல்துறையினர் நான்காம் மாடிக்கு சென்று அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதோடு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்கள்.
ஒருவர் பிழை செய்திருந்தால் கைது செய்வதற்கான முறை இருக்கின்றது. ஆனால் அடாவடியாக 50ற்கு மேற்பட்ட குழுவினர் சென்று இருவரை கைது செய்வதற்காக, மிளேச்சத்தனமாக தாக்கி படிகளிலே இழுத்துச் சென்று பேருந்திலே ஏற்றினர்.
ஏற்றிச் சென்ற நிலையிலும் அவர்களை எந்த காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள் என அறிவதற்கு முயற்சி செய்தும் அதற்குரிய தகவல்களினை அவர்கள் வழங்காது அவர்களை மாலைவேளை வரை மறைமுகமாகவே வைத்திருந்தார்கள்.
அதன் பின்னரே எமது சங்க பிரதிநிதிகள் மாத்திரமின்றி ஏனைய சங்க பிரதிநிதிகள், எங்களுடைய சங்கத்தின் சட்டத்தரணிகள் உட்பட பலர் அவர்களைத் தேடுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு பின் காவல் நிலையத்திற்கு சென்று அவர்கள் தொடர்பான அனைத்து விடயங்களையும் அறிந்து அவர்களை பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.
அத்துமீறிய காவல்துறையினர்

எங்களுடைய தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் எதிர்விதமான சம்பந்தமும் அற்ற நிலையில் அவர்களுடைய அரசு சேவையினை மாத்திரம் செய்துகொண்டிருந்தார்கள்.
அந்த சந்தர்ப்பத்திலே அத்துமீறிய காவல்துறையினர் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய காரணம் என்ன? இவர்களுக்கு இவ்வாறான அதிகாரத்தை கொடுத்ததை யார்? என்கின்ற பல கேள்விகள் நமக்கு எழுகின்றது.
இதனை கேட்பதற்காகவே இன்று எதிர்ப்பு நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் முன்பதாக நாங்கள் ஈடுபட்டிருந்தோம். இன்றும் கல்வி அமைச்சுக்கு முன்பதாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கல்வி அமைச்சருடன் கலந்துரையாட முற்பட்ட பொழுதிலும் கல்வி அமைச்சுக்குள் பிரவேசிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்திருந்தார்கள்.
எனவே தொடர்ச்சியாக ஆசிரியர்களுடைய குரல்களினை இவர்கள் அடக்குகின்ற நடவடிக்கைகள் தான் ஈடுபட்டுக் வருகின்றனர்.
மிலேட்சத்தனமாக கைது

இன்றைய தினம் ஆசிரியர்களின் சங்கங்கள் மற்றும் அதிபர்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்திந்தார்கள்.
எனவே நாங்கள் இறுதியாக அரசாங்கத்திற்கு கூறிக் கொள்வது, நீதிக்கு முரணாக காவல்துறையினரை தூண்டி தொழிற்சங்கவாதிகளிணையும், நீதிக்காக குரல் கொடுக்கின்றவர்களையும் அவர்களின் குரல்களையும் அடக்குகின்ற செயற்பாடுகளை இவர்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே நாங்கள் கூறுகின்றோம் இந்த தொழிற்சங்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்கு அதாவது எங்களுடைய இலங்கை அரச ஆசிரியர் சங்கத்தினுடைய நிதிச் செயலாளர் நாலக்க தி சில்வா மற்றும் மேல் மாகாண செயலாளர் ஹர்சனாத்த ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த இரு சகோதரர்களையும் மிலேட்சத்தனமாக கைது செய்ததற்கான நீதியினை எங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
அவ்வாறே நீதியினை வழங்காத பட்சத்தில் நாங்கள் தொடர்ச்சியாக இந்த போராட்டத்தினை முன்னெடுப்போம் . முன்னெடுப்பதோடுட இந்த நீதிக்கு முரணான அரசாங்கத்தினை வீட்டிற்கு அனுப்பும் வரை இந்த போராட்டத்தினை தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.” என தெரிவித்தார்.