நள்ளிரவில் இராணுவத்தினர் கொடூர தாக்குதல்: முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் போராட்டக்களம்..! நீடிக்கும் பதற்றம்
8 பேர் கைது
கடந்த 100 நாட்களுக்கு மேலாக கொழும்பு காலிமுகத்திடல் சிறிலங்கா அதிபர் செயலகத்தின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறிலங்கா அதிபர் செயலகத்தை முற்றுகையிட்ட முப்படையினர் கோட்டா கோ கம போராட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.
இவ்வாறு அங்கிருந்த போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதி முற்றுமுழுதாக முப்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறிலங்கா அதிபர் செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடியிருந்த கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டுள்ளதகவும் இதன்போது 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர்
போராட்ட களத்திற்குள் அத்துமீறிய இராணுவத்தினர் ஆர்ப்பாட்டக்காரர்களை அடித்து விரட்டியுள்ளதோடு அவர்களின் கூடாரங்கள், வாகனங்கள், பாதாகைகள் என அனைத்தும் இராணுவத்தினரால் அகற்றப்பட்டுள்ளது.
படையினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து செய்தியறிக்கையிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் பலர் தாக்கப்பட்டுள்ள அதேவேளை கைதுசெய்யப்பட்ட இரு பத்திரிகையாளர்களிற்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.