தமிழர்தாயகப் போராட்டம் - பிரித்தானியாவிலிருந்து வெளியானது கூட்டறிக்கை!
சிறிலங்காவின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டு வரும் முயற்சிக்கும் ஏனைய அடக்குமுறை நகர்வுகளுக்கும் எதிராக நாளை தமிழர் தாயகத்தில் நடத்தப்படவுள்ள பொதுவேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் ஈழத்தமிழரின் விடயங்களில் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளில் உள்ள தமிழர்தரப்பு இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்ட சந்தர்ப்பமாகவும் இந்த அறிக்கையிடல் அமைந்துள்ளது.
கூட்டறிக்கை

தமிழர்தாயக பகுதிகளில் நாளை நடத்தப்படவுள்ள பொதுமுடக்கப் போராட்டத்துக்கு பிரித்தானியாவில் இருந்தும் ஆதரவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான கன்சவேட்டிவ், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி மற்றும் லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சியில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த ஆதரவு நிலையை வெளிப்படுத்தியுதுடன் இந்த அறவழிப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அரசியல் கட்சிகள் மற்றும் குடிசார் அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளன.
அத்துடன் வடக்கு-கிழக்கில் உள்ள பொதுமக்களும் இந்த பொது முடக்கப்போராட்டத்தில் இணைந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு வலுவான செய்தியொன்றை அனுப்ப வேண்டும் எனவும் இந்தகூட்டறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் இராணுவமயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சர்வதேச நியமங்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும். தமிழ் பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சிறிலங்கா படையினரின் தலையீடுகள் அகற்றப்படவேண்டும் என்பது உட்பட்ட விடயங்களும் இந்த கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.