அனைத்து மோசமான சம்பவங்களுக்கும் அருந்திகவே காரணகர்த்தா- பாரிய குற்றச்சாட்டை முன் வைத்த தேரர்!
ராகமை மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது புதல்வரை விடுவிக்க அருந்திக பெர்னாண்டோ ஆயிரக்கணக்கான குற்றங்களை செய்வார் என உடுவே தம்மாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
புத்தளம் மாவட்டத்தில் நடக்கும் குற்றங்கள், தவறுகள், அநீதிகள், மோசமான சம்பவங்கள் போன்று இலங்கையில் எந்த மாவட்டத்திலும் நடப்பதில்லை.
அருந்திக பெர்னாண்டோவே அனைத்து மோசமான குற்றவியல் சம்பவங்களுக்கும் முன்னோடி என்பதை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் வசித்து வரும் பௌத்த பிக்கு ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நடந்தது. எனினும் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்படுவதை, அருந்திக பெர்னாண்டோ தலையிட்டு தடுத்தார் எனவும் உடுவே தம்மாலோக்க தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
