நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சிக்கல் - ராஜபக்சக்களுக்கு எதிரான மனு!
இலங்கையின் பிரபல நீச்சல் வீரரும் பயிற்சியாளருமான ஜூலியன் பொலிங், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன உள்ளிட்டவர்களினால், ராஜபக்சக்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பரிசீலனைத் திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டைப் பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்ற அனைவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ராஜபக்சக்களுக்கு எதிரான மனு
அதனடிப்படையில், குறுகிய நோக்குடன் செயற்பட்ட ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு எதிர்வரும் 27ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, டபிள்யூ.டி.லக்ஷ்மன், அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் நாணயச் சபை பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை
இந்த மனு நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய, எல்டிபி தெஹிதெனிய மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
