ஏழு மூளை உள்ள பசில் நாட்டுக்கு வந்து ஏழு இடிகள் தான் விழுந்தன - பகிரங்க குற்றச்சாட்டு!
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்களே நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு சென்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொலன்னாவை தொகுதி அதிகார சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித விஜயமுனி சொய்சா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
2005 ஆம் ஆண்டு தானும் இணைந்து மகிந்த ராஜபக்சவை நாட்டின் அதிகராக பதவிக்கு கொண்டு வந்ததாகவும், எனினும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் நிர்வாகத்தில் தலையிட்டு நாட்டை அழிவை நோக்கி கொண்டு சென்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.
மகிந்தவுக்காக 5 மாவட்டங்களில் பிரசாரம்
கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 5 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரங்களை நான் பொறுப்பேற்று, மகிந்தவை அதிபர் பதவிக்கு கொண்டு வந்தோம்.
சிறிது காலம் சென்றதும் அவரது பிள்ளைகளின் கைகள் ஓங்கின. மாமா என்றனர். அங்கிள் என்றனர். பின்னர் மச்சான் என்றனர். இறுதியில் அவர்கள் இரவில் போடும் ஆட்டங்கள் பற்றி எமக்கு எதிரில் பேச ஆரம்பித்தனர்.
அடுத்தது பாரியார். பிள்ளைகள் ஒரு பக்கம். இரண்டு தம்பிமார் அமெரிக்காவில் இருந்து வந்தனர். இவர்களில் ஒருவர் மிஸ்டர் 10 வீதம். இலஞ்சத்தை உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு சட்டமாக மாற்றிய பசில் இலங்கைக்கு வந்தார்.
பசில் நாடு திரும்பாவிட்டால் மகிழ்ச்சி
அவருக்கு ஏழு மூளைகள் இருப்பதாக கூறினர். ஆனால் எமது நாட்டின் மீது ஏழு இடிகள் விழுந்தன. சீக்கிரமாக செல்லுமாறு கூறி அவரை விமானத்தில் ஏற்றி அனுப்பி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
தற்போது சென்று விட்டார் மகிழ்ச்சி. மீண்டும் இந்த பக்கம் வர வேண்டாம் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார்.
