அநாவசிய செலவுகளைத் தவிருங்கள்! நாட்டு மக்களிடம் ரணில் கோரிக்கை
நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் வரை அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து கொள்ளுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .
இலங்கை அரசால் 300 இற்கும் மேற்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருள்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த 300 பொருள்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது, மக்களின் பசியையாவது போக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தான் நான் பிரதமர் பதவியை பொறுப்பேற்றேன்.
சிறிலங்காவின் அதிபர் பதவி
அதன் பின்னர் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைமையைக் கருத்தில்கொண்டு அதிபர் தெரிவில் நான் போட்டியிட்டேன்.
மக்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடியிருக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன் அதிபராகத் தெரிவாகினேன். எனினும், மிகவும் சவால்மிக்க காலகட்டத்தில் தான் இந்த அதி உயர் பதவியில் நான் இருக்கின்றேன்.
பொருளாதார ரீதியில் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நான் முதலில் தீர்வு கண்டே தீருவேன்.
அதன் பின்னர் தேசிய ரீதியிலான ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் அனைத்துக் கட்சிகளின் கலந்தாய்வுடன் தீர்வுக்கான எனது பயணம் தொடரும் என்றும் கூறியுள்ளார் .
ரணிலின் கால அவகாசம்
அதேவேளை, பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ இரண்டு ஆண்டுகளாவது தேவை. அதிலும் எதிர்வரும் ஓராண்டு எமக்கு மிகப் பெரிய சவாலான ஆண்டாகும்.
இந்நிலையில், நாட்டு மக்கள் அநாவசியச் செலவுகளைத் தவிர்த்து அத்தியாவசிய உணவுப் பொருள்களை சேமித்து வைக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

