சனல் 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்! உடைக்கப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் உண்மைகள்
இலங்கையில் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்த பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான இலங்கை குறித்த சிறப்பு ஆவணம் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே திடுக்கிடும் சில விடயங்களை வெளிப்படுத்தியது.
இந்த ஆவணம் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிர்கள் உட்பட்ட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களால் நேரடியாக பார்வையிடப்பட்டிருந்தது.
அதேபோல, இன்று காலை முதல் தமிழர்களின் சமுக வலைத்தளங்களிலும் அது பகிரப்பட்டுவருகிறது.
அதிர்ச்சியூட்டும் ஆவணப்படம்
ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)
2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் சஹ்ரானின் அமைப்பில் இருந்து குண்டுதாரிகளால் ஆறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தபட்டிருந்தன.
இதில் 269 பேர் கொல்லப்பட்டு ஏராளமானவர்கள் காயமடைந்த நிலையில், இந்தத் தாக்குதலில் பாதிப்படைந்தவர்களின் சாட்சியங்களும் இருந்தன.
இந்த குரூரத்துக்குப் பின்னால் ராஜபக்ச அதிகாரமையத்தின் அதிகார ஆசைகள் சார்ந்த உண்மைகள் இருப்பதாகவும் இந்த ஆவணம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆவணத்தின் முக்கால்வாசி பகுதி குண்டுவெடிப்புகள் நடைபெறுவதற்கு முன்னர் இருந்த நிலைமைகளை பேசுகிறது. அதில் நவீன இலங்கையின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான விளக்கம் உள்ளது.
அதேபோல 1983 ஆம் ஆண்டிலிருந்து தீவிரம்பெற்ற தமிழர்களின் ஆயதப் போராட்டம் குறித்தும் இந்த ஆவணத்தில் கூறப்பட்டது.
திரிப்போலி படைப்பிரிவு
இந்த ஆவணத்தில் முக்கிய சாட்சியாளராக தோன்றும் ஆசாத் மௌலானா ராஜபக்சக்களுக்குரிய மொழிபெயர்ப்பாளராகவும் உதவியாளராகவும் சுமார் 20 வருடங்கள் பணியாற்றியவர்.
இவரது சாட்சியத்தில் ராஜபக்சக்கள் தமது அரசியல் எதிரிகளை அடக்க திரிப்போலி படைப்பிரிவு எனப்படும் இரகசிய குழுவை உருவாக்கியதாகவும் கோட்டாபய இந்தப்பிரிவை நிறுவ உத்தரவிட்டபோது தான் அந்த அறையில் இருந்ததாகவும் ஆசாத் மௌலானா கூறியுள்ளார்.
அத்துடன், ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு முதல் வருடமான 2018 இல், சஹ்ரானின் தேசிய தௌவீத் ஜமாத் உறுப்பினர்களுக்கும் ராஜபக்சவின் இராணுவ உளவுத்துறையின் தலைவராக இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கும் இடையே ஒரு சந்திப்பை நடத்தவும் தானே உதவியதாகவும் குறிப்பிட்டார்.
குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணை
தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்தும் இதுகுறித்து சுரேஷ் சாலேயின் இராணுவ உளவுத்துறை; நடவடிக்கையை எடுக்கப்படவில்லை எனவும் இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்போதும் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளர் நாயகமாக உள்ள சாலே குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளை தடுத்தமைக்கான ஆதாரம் இருப்பதாகவும் ஆசாத் மௌலானா கூறுகிறார்.
ஆகமொத்தம் ராஜபக்ச குடும்பம் மீண்டும் இலங்கையில் அதிகாரத்தை பெறுவதற்காக சஹ்ரானின் தேசிய தௌவீத் ஜமாத் என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பின் உதவி பெறப்பட்ட சதி இருந்ததை இந்த ஆவணம் ஆதாரப்படுத்தியுள்ளது.