இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்தது
இலங்கையின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு ஒக்டோபர் மாத இறுதியில் 3 ஆயிரத்து 562 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செப்டம்பர் முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் அந்நிய செலாவணி கையிருப்பானது 0.6 வீதத்தால் அதிகரித்துள்ளது.
கையிருப்பை மேம்படுத்தும் நடவடிக்கை
இலங்கையில் அந்திய செலாவணி கையிருப்பு பற்றாக்குறையை அடுத்து கடந்த காலங்களில் சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு இறக்குமதி தடைகளை விதித்திருந்தது.
மறுபுறம் அந்நிய செலாவணி கையிருப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
அந்த வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் முதல் தவணையாக வழங்கப்பட்ட நிதி மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மேம்பட்டிருந்தது.
பரிமாற்ற வசதி
இதேவேளை,1.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான, சீனாவின் மக்கள் வங்கியின் பரிமாற்ற வசதியை இந்த கையிருப்பு உள்ளடக்கியதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பரிமாற்ற வசதியை பயன்படுத்துவது நிபந்தனைகளுக்கு உட்பட்டது எனவும் இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது.
ஒகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு 3.8
பில்லியன் அமெரிக்க லொர்களாக இருந்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.