இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக மாறப்போகும் இலங்கை: கடும் எதிர்ப்பை வெளியிட்ட சரத்வீரசேகர
இலங்கையில் பயன்படுத்தப்படும் இந்திய ரூபாவுக்கு எதிராகவும், இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை விமான நிலையங்களை வழங்குவதற்கும் தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும், இலங்கையை இந்தியமயமாக்கக் கூடாது என்று அரசாங்க எம்.பி ஒருவர் இன்று தெரிவித்தார்.
நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்பதற்கு அதிபர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியது என்றும், இலங்கை படிப்படியாக இந்தியமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுமானால் அதற்கு தாம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியாவின் 29வது மாநிலமாக
"இலங்கையில் இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது இலங்கை இந்தியாவின் 29வது மாநிலமாக மாறுவதையோ நாங்கள் எதிர்க்கிறோம்.
இலங்கைக்கு இந்தியா வழங்கிய ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இருப்பினும், இந்திய முதலீட்டாளர்களுக்கு விமான நிலையங்களை வழங்குவதை நாங்கள் எதிர்க்கிறோம். விமான நிலையம், நாட்டிற்குள் நுழையும் உணர்வுபூர்வமான இடமாகும்.நாட்டின் விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனம் கைப்பற்றினால் அது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகும்," என்றார்.
எட்காவில் இலங்கை கைச்சாத்திடக் கூடாது
இந்தியாவுடனான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (ETCA) இலங்கை கைச்சாத்திடக் கூடாது என்று கூறிய எம்.பி., இதன் மூலம் இந்தியர்கள் இலங்கையில் வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
"இலங்கை இந்தியாவுடன் ETCA ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போகிறது என்றால் நாங்கள் எதிர்க்கிறோம். இதன் மூலம் இந்தியர்கள் வேலை வாய்ப்புக்காக நாட்டிற்குள் நுழைய முடியும். இந்தியாவில் 44 மில்லியன் மக்கள் வேலை இல்லாமல் உள்ளனர். சுமார் 200,000 மருத்துவர்கள் இந்தியாவில் வேலை இல்லாமல் உள்ளனர். சுமார் 1.5 மில்லியன் பேர் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆண்டுதோறும் பொறியாளர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள், 25 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளில் 42 சதவீதம் பேர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியர்களை இலங்கையில் வேலை தேட அனுமதிப்பது இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும்," என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |