விடுதலைப்புலிகளை வலுவிழக்கச் செய்யும் ரணிலின் தந்திரமே இதற்கு காரணம்!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை கட்சிகளுக்கு சார்பானவர் என்ற தோற்றப்பாட்டை, தெற்கில் உள்ள சிங்கள பௌத்த மற்றும் தேசிய அமைப்புகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தமையாலேயே பௌத்த வாக்கு வங்கியை அவர் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் சமாதான உடன்படிக்கையை செய்து கொண்டமையானது, புலிகளை வலுவிழக்க செய்ய வேண்டும் என்ற தந்திரமான நடவடிக்கையாக இருந்தாலும் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில், ரணில் விக்ரமசிங்க தேசப்பற்று இல்லாத தலைவர் என்ற நிலைப்பாடு ஆழமாக வேரூன்றியது.
சிங்கள பௌத்த மற்றும் தேசியவாத அமைப்புகள் இதனை மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்ற செய்தனர். இதுவும் ரணில் விக்ரமசிங்கவிற்கு பௌத்த வாக்கு வங்கியை இழக்க செய்தது.
மேலும் சஜித் பிரேமதாச பௌத்த சாசனத்திற்கு சேவைகளை செய்து வரும் நிலையில், அவரது தாய் வீடான ஐக்கிய தேசியக் கட்சியின் பௌத்த வாக்கு வங்கி குறைந்துள்ளது.
கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அதன் பௌத்த வாக்கு வங்கி குறைய ஆரம்பித்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இணை அமைப்பான பிக்கு முன்னணி கலைக்கப்பட்டமையே இதற்கு காரணமாக அமைந்தது. இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆலோசனைகளை வழங்குவதில் இருந்து மாகாநாயக்க தேரர்களும் விலகிக்கொண்டனர்.
இந்நிலையில், நாட்டின் பிரதான பௌத்த பீடங்களில் ஒன்றான ராமஞ்ஞைய மஹா நிக்காய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு “சிறிலங்கா ஜனரஞ்சன” என்ற கௌரவ பட்டத்தை வழங்கியது.
இதற்கு முன்னர் இந்த கௌரவப்பட்டம் இலங்கையின் முதல் பிரதமரான காலஞ்சென்ற டி.எஸ்.சேனாநாயக்கவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சஜித் பிரேமதாச , பௌத்த சாசனத்திற்கு செய்து வரும் சேவையை பாராட்டும் வகையில் ராமஞ்ஞைய நிக்காய கௌரவப் பட்டத்தை அவருக்கு வழங்கியுள்ளது.
சஜித் பிரேமதாச சசுனட அருண என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நாடு முழுவதிலும் பின்தங்கிய நிலையில் உள்ள பௌத்த விகாரைகளை மேம்படுத்த உதவிகளை வழங்கி வருவது பௌத்த சங்க சபையினரின் பாராட்டை பெற்றுள்ளது.
இதனால், ரணில் விக்ரமசிங்க பௌத்தத்திற்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்று நோக்கப்பட்டார். டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, ரணசிங்க பிரேமதாச மற்றும் டி.பி.விஜேதுங்க போன்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தலைவர்கள் மாகாநாயக்க தேரர்களுக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்து வந்தனர்.
சேர் ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர். ஜெயவர்தன, ரணில் விக்ரமசிங்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மாகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த சங்க சபையினருக்கு தூர விலகி பணியாற்றிய தலைவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
