நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை இதற்கு தீர்வு கிடைக்காதா..! டக்ளஸை கிண்டலடித்த சிறீதரன்
நீங்கள் கடற்றொழில் அமைச்சராக இருக்கும் வரை இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்த முடியாதா?? என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடற்றொழில் அமைச்சரிடம் கிண்டலாக வினவினார்.
இன்று யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் விவாதிக்கப்பட்டது.
குறித்த விவாதத்தில் கருத்துரைத்த சிறீதரன்,
நீங்கள் கடற்தொழில் அமைச்சராக இருக்கின்றீர்கள் நீண்ட காலமாக ஒரே விடயத்தினை திரும்ப திரும்ப கூறுகின்றீர்கள் ஆனால் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா....
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாதா?? அல்லது நீங்கள் அமைச்சராக இருக்கும் வரை இதற்கு தீர்வு கிடைக்காதா? என கிண்டலாக கூறினார்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடற்படை அதிகாரியிடம் கேள்வி கேட்கப்பட்டது
குறிப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் கருத்து தெரிவிக்கையில், வரவு செலவுத் திட்டத்தில் 20 வீதமான நிதி பாதுகாப்பு செலவினங்களுக்காக ஒதுக்கப்படுகின்றது.
ஆனால் நீங்கள் பிறிதொரு நாட்டு படகுகள் எமது நாட்டுக்குள் வருகை தருவதினை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் நீங்கள் தேசிய பாதுகாப்பினை செயற்படுத்தவில்லை.
கடற்படையின் அறிக்கை வேண்டும்
யுத்த காலத்தில் வட பகுதியில் மீனவர்கள் சுதந்திரமாக தமது மீன்பிடி செயல்பாட்டை முன்னெடுத்தார்கள் ஆனால் யுத்தம் முடிந்த பின்னர் தான் இந்த இந்திய இழுவை மீனவர்களின் பிரச்சனை காணப்படுகின்றது யுத்த காலத்தில் இங்க எந்த ஒரு பிரச்சனையும் இங்கே காணப்படவில்லை.
எனவே கடற் படையானது தேசிய பாதுகாப்பினை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் இந்திய படகுகளை கட்டுப்படுத்தும் விடயத்தில் ஏன் தயங்குகிறார்கள் என்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரியப்படுத்தவுள்ளோம்.
அத்தோடு கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன், உங்களிடம் ஆளணி இல்லை என்றால் ஏன் அதனை ஏற்கனவே தெரியப்படுத்தவில்லை கடற்படை உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு உங்களுடைய செயற்பாடு உள்ளது வேறு நாட்டின் படகு உள்ளே வருகின்றது என்றால் தேசிய பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நாங்கள் பார்க்க முடிகின்றது.
எனவே குறித்த விடயம் தொடர்பில் அடுத்த கூட்டத்திற்கு வரும்போது இந்த இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையால் என்ன செய்ய முடியும் என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.