இலங்கை சுற்றுலாத்துறையில் விரிவாக்கம்: முக்கிய நாடுகளில் வேலைத்திட்டங்கள் தீவிரம்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை 2025 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் நளின் பெரேரா (Nalin Perera) தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்திலிருந்து இலங்கை சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளுக்கிடையேயான விளம்பரப்படுத்தல் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
முதல் கட்ட விளம்பரப்படுத்தல்
அதன்படி, முதல் கட்ட வேலைத்திட்டங்களுக்காக சீனா (China), பிரித்தானியா (UK), பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இந்தியாவை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவு செய்துள்ளது.
இரண்டாம் கட்டமாக ரஷ்யா, அவுஸ்திரேலியா (Australia), ஜப்பான், தென் கொரியா, போலந்து, இத்தாலி மற்றும் ஸ்காண்டிநேவியா, மத்திய கிழக்கு நாடுகள், பெனலக்ஸ் நாடுகள், [பெல்ஜியம் (Belgium), நெதர்லாந்து (Netherlands), லக்ஸ்சம்பர்க் (Luxembourg)] ஆகிய நாடுகள் தெரிவு செய்யப்படுமென்று நளின் பெரேரா கூறியுள்ளார்.
இந்த வேலைத்திட்டங்கள் அடுத்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை 700,000 ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்த்துள்ளதாகவும், குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
இந்தநிலையில், ஓகஸ்ட் 12 ஆம் திகதிக்குள் 1.2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும், வரும் மாதங்களில், குறிப்பாக ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மேலும் 1.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்த்துள்ளதாகவும் நளின் பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் வருமானம் 1.88 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதுடன் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 73.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தனது சமீபத்திய வாராந்த அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |