மீண்டும் கைகொடுக்கும் இந்தியா - எரிபொருளுடன் விரையும் நான்கு கப்பல்கள் (படம்)
விரையவுள்ள நான்கு கப்பல்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் இந்தியாவில் இருந்து இரண்டு டீசல் கப்பல்களும், இரண்டு பெட்ரோல் கப்பல்களும் ஜூலை மாதம் வரவுள்ளதாகவும், இந்த நான்கு எரிபொருள் கப்பல்களையும் இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து இலங்கை மற்றும் இந்திய அரசுகள் கலந்துரையாடி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருக்கு இடையில் திங்கட்கிழமை புது டெல்லியில் உள்ள வீடமைப்பு மற்றும் நகர விவகார அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இலங்கையின் அவசர தேவைகள்
உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கையின் அவசர தேவைகள் குறித்து இந்திய அமைச்சருடன் கலந்துரையாடியுள்ளதாக இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கடுமையான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு இந்திய அரசாங்கம் தற்போது உதவி வருகிறது மற்றும் கடந்த மூன்று மாதங்களில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 400,000 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றுள்ளது.
இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பாரதூரமான சவால்கள்
பெட்ரோலிய பொருட்களின் விநியோகம் தொடர்பாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பாரதூரமான சவால்கள் மற்றும் சிரமங்கள் குறித்து இந்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்கு விளக்கமளிக்க உயர்ஸ்தானிகர் மொரகொட ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியை சமாளிப்பதற்கும் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பெட்ரோலிய துறையில் இந்தியாவும் இலங்கையும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்தும் உயர்ஸ்தானிகரும் அமைச்சரும் கலந்துரையாடியுள்ளனர்.
பெட்ரோலியம், எரிவாயு மற்றும் தொடர்புடைய விநியோகத் துறைகளில் இலங்கை நீண்டகால உறவுகளை ஏற்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் அவர்கள் விவாதித்துள்ளனர்.