கடன் பொறிக்குள் சிக்குண்ட இலங்கை!! தப்பிக்க வழி கூறுகிறது எதிரணி
ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிந்தனையற்ற செயற்பாடு காரணமாக இலங்கை, பாரிய கடன் சுமையில் சிக்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பெற்றுக் கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குள் நாடு தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வௌியிட்ட அவர்,
''மக்களுக்கு உணவுப் பொருள் இல்லை. மருந்தில்லை. ஆனாலும் அரசாங்கம் மக்களை கஸ்டத்திற்குள் தள்ளிவிட்டு கடனை அடைப்பதற்கு காசை மிச்சப்படுத்தி வருகின்றது. இதனால் பாதிக்கப்படுவது நாட்டு மக்களே.
கடந்த எந்தவொரு அரசாங்கத்திலும் இத்தகைய கஸ்டங்களை மக்கள் அனுபவித்தது கிடையாது. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மக்களின் உணவு மற்றும் மருத்துச் செலவிற்கு தேவையான பணத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது. ஆனாலும் அது காலம் போய்விட்டது. ஆகவே இதற்கு மேலான இடங்களில் சென்று தான் இவர்கள் பணத்தினைப் பெற்றுக்கொள்ள நேரிடும்'' என்றார்.