கோட்டாபய இளைஞர்களால் வெளியேற்றப்பட்டமைக்கு இதுவே காரணம் - சர்வதேச நீதிகோரி தொடர் போராட்டம்!
நாட்டில் நீதியை நிலைநாட்டாமையினாலேயே சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச வெளியேற்றப்பட்டதாக காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,
எமது உறவுகளின் உண்மைநிலையை வலியுறுத்தி 13 வருடங்களாக நாம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எனினும் எமக்கான நீதி கிடைக்கவில்லை.
சர்வதேச நீதி விசாரணை வேண்டும்
அரசு மீது நம்பிக்கை இழந்த நாம் சர்வதேசத்திடம் எமக்கான நீதியை வேண்டி தொடர்ச்சியாக போராடி வருகின்றோம். இந்த நாட்டில் நீதியை நிலை நாட்டாமையினாலேயே கோட்டாபயவை தெற்கின் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளனர்.
எனவே இந்த சந்தர்ப்பத்தில் சர்வதேச நீதி விசாரணையை முன்னெடுக்குமாறு நாம் கோரி நிற்கின்றோம். எமக்கான நீதி ஒன்று கிடைக்கும் வரையில் நாம் இந்த போராட்டங்களை இடைநிறுத்தாமல் தொடர்ந்து முன்னெடுப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இனப்படுகொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ் இனப்படுகொலையாளிகளை சர்வதேசமே உடனடியாக கைதுசெய், தமிழ் இனத்தின் உரிமை மறுக்கப்பட்டநாடு சிறிலங்கா போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.


