வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் ஆர்ப்பாட்டத்தில் பதற்றம்; ஆர்ப்பட்டக்காரர் - காவல்துறையினரிடையே தள்ளு முள்ளு!
வவுனியாவில் இடம்பெற்று வரும் நீதி அமைச்சின் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
அதன் போது மாவட்ட செயலகத்திற்கு செல்ல முற்பட்டவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் மாவட்ட செயலகத்தற்குள் செல்ல முற்பட்டபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பல மணி நேரமாக காவல்துறையுடன் மல்லுக்கட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தம்மை உள்ளே செல்ல விடுமாறு கோரினர்.
இதேவேளை குறித்த பகுதியில் கடமையில் நின்றிருந்த ஆண் காவல்துறை உத்தியோகத்தர்கள் பெண் போராட்டக்காறர்களை கட்டுப்படுத்தி தள்ளுமுள்ளில் ஈடுபட்டனர். காவல்துறையின் இச்செயற்பாட்டுக்கு அங்கிருந்த பலரும் தமது அதிருப்தியினை தெரிவித்தனர்
இந்நிலையில் 11 மணியளவில் வவுனியா காவல் நிலைய பொறுப்பதிகாரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் சென்று தற்போது குறித்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் வரவில்லை எனவும் சமாதான நீதிவான்களே வந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே அதிகாரிகள் வந்ததும் உங்களை செல்ல அனுமதிக்கின்றோம் என தெரிவித்துள்ளார். இதன்போது 9 மணியில் இருந்து 4 மணிவரையில் நடமாடும் சேவை இடம்பெறும் என தெரிவித்திருந்த நிலையில், 11 மணிவரையில் அதிகாரிகள் வரவில்லையாயின் அந்த அலுவலகம் எதற்கு என ஆர்ப்பாட்டக்காரர்கள் கேள்வி எழுப்பினர்.
எமக்கு பணமோ சான்றுதழோ தேவையில்லை. எமது கருத்தை அந்த அலுவலகத்தில் கூறிவிட்டு வருகின்றோம் என தெரிவித்தனர்.











