நீதிமன்றின் உத்தரவையடுத்து வெடுக்குநாறி மலையில் மீண்டும் விக்கிரக பிரதிட்டை!
வவுனியா வெடுக்குநாறி மலையிலிருந்து அகற்றப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிட்டை செய்யுமாறு வவுனியா நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ள நிலையில் இன்றைய தினம் காலை விக்கிரகங்கள் பிரதிட்டை செய்யப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய இன்று முற்பகல் 11 மணிக்கு புதிய விக்கிரகங்கள் மீள பிரதிட்டை செய்யப்பட்டதோடு, பெருமளவான பக்தர்களும் அதில் பங்கேற்றிருந்தனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், நேற்று முன்தினம் அங்கு வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நீதிமன்றின் உத்தரவு

இந்த நிலையில் வவுனியா வெடுக்குநாறி மலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று வவுனியா நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் தேவராசா சுபாஜினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது விக்கிரகங்கள் இன்றி அங்கு நேற்று வழிபாடுகள் நடத்தப்பட்டமை தொடர்பிலும், வெடுக்குநாரி மலையிலிருந்த விக்கிரகங்கள் மற்றும் பூஜை பொருட்கள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அதிபர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனினால் தெரிவிக்கப்பட்டது.
மீள் பிரதிட்டை

இதனை ஆராய்ந்த வவுனியா நீதவான், வெடுக்குநாறி மலையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட விக்ரகங்களை அதே இடத்தில் மீண்டும் பிரதிட்டை செய்யுமாறும், பூஜை பொருட்களை சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
இந்த நிலையிலேயே சிவபூமி அறக்கட்டளை நிலையத்தினால் வழங்கப்பட்ட புதிய விக்கிரகங்கள் இன்று மீள பிரதிட்டை செய்யப்பட்டதாக வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாக உறுப்பினரொருவர் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் ஆலயத்தின் நிர்வாகத்தினர், பூசாரியார், சமூக ஆர்வலர்கள், வேலன் சுவாமிகள், அகஸ்தியர் சுவாமிகள், அரசியல் தரப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி சிவமோகன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உட்பட இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.