இலங்கை - வியட்நாம் கூட்டுறவு : அறிவியல் மற்றும் புத்தாக்கத் துறையில் புதிய ஒப்பந்தங்கள்
இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு இடையில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதன்முறையாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளன.
குறித்த ஒப்பந்தத்தில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் வியட்நாம் அரசாங்கத்தின் சார்பில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் வூ ஹாய் குவான் இன்று (08.05.2026) கையெழுத்திட்டுள்ளனர்.
தேசிய வளர்ச்சி இலக்குகளை அடைவதற்காக, அறிவியல் அறிவு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தங்களின் முக்கிய நோக்கமாகும்.
நீண்டகால ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்
இந்த ஒப்பந்தத்தின் மூலம், உயிரித் தொழில்நுட்பம், வேளாண்மை, மூலிகை மற்றும் உணவுத் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றத் தழுவல் தொழில்நுட்பங்கள், மின்னணுவியல், தானியக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை இது ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துதல், விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைப் பரிமாறிக்கொள்ளுதல், மாநாடுகள் மற்றும் பயிலரங்குகளை ஏற்பாடு செய்தல், மற்றும் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு இணைந்து நிதியளித்தல் ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |