யாழ் - கொழும்பு தொடருந்து சேவை : வடக்கு ஆளுநரின் முக்கிய கோரிக்கை
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகளை அதிகரிக்குமாறும், பயணிகளின் வசதிக்கேற்ப தற்போதைய நேர அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்துக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாலும், பாதுகாப்பான மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் பயணமாக தொடருந்து போக்குவரத்து அமைவதாலும் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (20) நடைபெற்ற யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான தொடருந்து சேவையில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் போதே ஆளுநர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
உயர்மட்டக் கலந்துரையாடல்
இதற்குப் பதிலளித்த தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர், தொடருந்து இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே சேவைகளை முழுமையாக மீள ஆரம்பிப்பதில் பிரதான தடையாக உள்ளதெனத் தெரிவித்தார்.

எனினும், புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்காலிகமாகச் சேவைகளை அதிகரிப்பது மற்றும் பகல் நேர தொடருந்து சேவைகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
அத்துடன், 'யாழ். ராணி' தொடருந்து சேவையில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டு, அதனை வவுனியா வரை நீடிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இலங்கை தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |