பெண்களுக்கு பாதுகாப்பாய் அன்று ஒரு தேசம் இருந்தது
பெண்கள் பாதுகாப்போடும் மதிப்போடும் வாழ்கிற ஒரு நாடு வளத்தையும் சிறந்த அடையாளத்தையும் கொண்டிருக்கும். பெண்கள் கண்ணீரோடும் பாரங்களோடும் வாழ்கின்ற நாடு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும்.
ஒரு நாட்டின் அத்தனை செயற்பாடுகளும் பெண்களைத்தான் பாதிக்கின்றன. வீழ்ச்சியிலும் எழுச்சியிலும் பெண்தான் முக்கிய பாத்திரத்தை வகிக்கிறாள். போரின் பாதிப்பிலும் பெண்கள்தான் அதிக துயரங்களைச் சுமக்க நேரிடுகிறது.
அதற்கு இலங்கைப் போரில் ஏற்பட்ட கதிகளும் போருக்குப் பிந்தைய காலமும் பெரும் பதிலாய் இருக்கிறது. ஆனாலும் ஈழப் பெண்கள் தங்களின் தனித்துவ ஆற்றலால் இந்த உலகிற்கு முன்னூதாரணமாய் தம் முகங்களை பதித்திருக்கிறார்கள்.
வெளிநாடு செல்லும் பெண்கள்
அண்மையில் பண்டாரநாயக்கா சர்வவதேச விமான நிலையத்திற்குச் சென்றிருந்தேன். கொரோனா பேரிடர் காலத்திற்கு முந்தைய சூழலைவிட இப்போது விமான நிலையத்தின் காட்சிகள் இலங்கையின் பல்வேறு உள்முகங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன.
அதில் ஒன்று அதிகளவிலான பெண்கள் இலங்கையில் இருந்து தொழிலுக்காக வெளிநாடு சென்று கொண்டிருக்கிறார்கள். அதிலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகளவிலான பெண்கள் செல்வதைக் காண முடிந்தது.
கடந்த காலத்தில் இஸ்லாமியப் பெண்கள் அதிகமாக சென்ற நிலையில் இப்போது சிங்கள மற்றும் தமிழ் பெண்களின் வெளிநாட்டு பயணம் அதிகரித்திருக்கிறது. பிரிவின் கண்ணீரோடும் கனத்த மூச்சோடும் இருந்த அந்த விமான நிலைய சூழல், இலங்கையில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியும் பெண்கள்மீதும் கணிசமான அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை உணரச் செய்தது.
2021ஆம் ஆண்டில் இருந்து வெளிநாடு செல்லும் பெண்களின் விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்லும் ஆண்களின் வீதம் கூடிக் குறைகின்ற நிலையில் பெண்களின் விகிதம் அதிகரித்துச் செல்கிறது என்றும் 2022ஆம் ஆண்டில் வேலை நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியவர்களில் 40 சதவீதமானவர்கள் பெண்கள் என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
2023ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.
மாலதி என்ற முதல் விதை
ஒக்டோபர் 10 தமிழ் ஈழப் பெண்கள் எழுச்சி நாள். ஈழப் பெண்களுக்கு அடையாளம் கிடைத்த நாள். ஈழப் பெண்கள் வீரமுகம் பதித்த நாள். ஈழப் பெண்கள் வரலாற்றில் பெரும் விடுதலை வகிபாகத்தை சூடிய நாள். கோப்பாய் வெளியில் இந்திய இராணுவத்தினருடன் நடந்த போரில் இரண்டாம் லெப் மாலதி வீர மரணம் அடைந்த நாளே ஒக்டோபர் 10.
அதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் மாவீரராக தமிழ் ஈழத்தின் முதல் பெண் மாவீரராக மாலதி அவர்கள் வரலாற்றில் தம் பெயரையும் முகத்தையும் பதித்த உன்னதமான நாள். மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட மாலதி அவர்களின் வீர மரணம், ஈழப் பெண்களின் வாழ்விலும் விடுதலைப் போராட்டத்திலும் பெருந்தாக்கமாய் மாறிற்று.
காயமடைந்த நிலையில், தொண்டைக் குழியில் நஞ்சுடன் “எனது துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்” என்ற அவரின் இறுதிக் குரல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்றும் அடங்காத தீராத குரலாயிற்று.
அன்றைய தமிழீழம் என்பது பெண்களுக்கு பேரிடத்தை வழங்கியது. ஆண்களும் பெண்களும் சமம் என்ற சிந்தனையை தான் உலக நாடுகள் ஆகச் சிறந்த அடைவென்றும் உயர்வென்றும் கொண்டிருந்த நிலையில், ஆண்களைவிடப் பெண்கள் மேலானவர்கள் என்பதை வரலாற்றினாலும் சரித்திரத்தினாலும் ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் சாத்தியமாக்கினார்.
இதனால் இரண்டாம் லெப் மாலதி, கப்படன் அங்கயற்கண்ணி, மேஜர் சோதியா, கஸ்தூரி, கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி என்று ஈழ விடுதலைப் புலிப் பெண் போராளிகள் உலகின் முன்னூதாரணம் மிக்க பெண்கள் என மிளிர்ந்தனர்.
தமிழ் ஈழத்தில் பெண்கள்
அன்றைய தமிழ் ஈழத்தில் ஒக்டோபர் 10 தமிழ் ஈழப் பெண்களின் எழுச்சி நாளாய் தனித்த அடையாளத்துடன் இருக்கும். பெண் போராளிகளின் அணிவகுப்பு, வீரப் பெண் தளபதிகளின் வழிநடத்தல் என்று ஈழ தேசம் எங்கும் தமிழீழ மகளீர் எழுச்சி நாள் நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெறும்.
உண்மையில் சிறப்பு தினங்கள் என்பன வெறும் தினங்களாக மாத்திரம் அன்றிருக்கவில்லை என்பதையே இப் பத்தி சொல்ல விளைகிறது. இன்றைய காலத்தில் பல்வேறு தினங்களும் கொண்டாடப்படுகின்றன.
பெயரளவில் தான் அந்த தினங்கள் இருக்கின்றனவே தவிர, அர்த்தம் அளவில் அந்த தினங்களுக்கு எதிரான நிலையில்தான் உண்மை இருக்கிறது. அன்றைய காலத்தில் பெண்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழக்கும் தேசமாக தமிழர் தேசம் இருந்தது.
நள்ளிரவு வேளையிலும் ஒரு பெண் தனியாய் பயணம் செய்கின்ற சுதந்திரமும் சமூகச் சூழலும் அன்றைக்கு இருந்தது. அத்துடன் கொடிய போர்க்காலத்திலும் பெண்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு அவலங்களையும் துயரங்களையும் எதிர்கொள்ளுகின்ற நடவடிக்கைகள், பயிற்சிகள் அன்றைக்கு இருந்தன.
பெண்களுக்கு போர்க்காலத்திலும் பல்வேறு வேலை வாய்ப்புக்கள் இருந்தன. குறிப்பாக தமிழீழ காவல்துறையில் பெண் காவல்துறைப் பிரிவு பெண்கள் சார்ந்த பல்வேறு நலன்களை முன்னெடுத்த கட்டிக்காத்த அமைப்பு என்ற பெருமையை வகித்தமை முக்கியமானது.
விதவைகள் அதிகமுள்ள நாடு
உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் விதவைகள் வறுமையின் பிடியில் உள்ளனர். 85 மில்லியன் விதவைகள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
1.5 மில்லியன் விதவைகள் குழந்தைகளுடன் வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இதில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புப் போரின் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வடக்கு கிழக்கில் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.
இந்த புள்ளி விபரத்தை இலங்கை அரசின் கணக்கெடுப்புகளின் வாயிலாகவே அறிகிறோம். அத்துடன், கிழக்கில் சுமார் 49ஆயிரம் விதவைகளும் வடக்கில் சுமார் 40ஆயிரம் விதவைகளும் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.
போர் விதவைளில் 12ஆயிரம் பேர் நாற்பது வயதை அண்மித்தவர்கள் என்றும் 8000ஆயிரம் பேருக்கு மூன்று வயதுப் பிள்ளைகள் இருக்கின்றன என்றும் இலங்கை அரசின் மகளீர் விவகார அமைச்சின் தகவல்கள் கூறியிருக்கின்றன.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் சிறுபான்மையினர். ஆனால் சிறுபான்மை ஈழத் தமிழர்களின் பெரும்பான்மையாக விதவைகள் எனப்படும் கைம்பெண்கள் வசிக்கின்ற நிலை வாயிலாக நாம் அவதானிக்க வேண்டிய செய்திகள் மிகவும் முக்கியமானது.
அதிக விதவைகள் முல்லைத்தீவில்
போரில் அதிக ஆண்கள் கொல்லப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு என்றும் அங்கே தான் அதிகமான விதவைகள் வாழ்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம் கூறுகின்றது. போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியல் நிலமை என்பது மிகவும் துயரமாகவும் போராட்டம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.
போரில் விதவைகளாகப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது இந்த நிலவரம் குறித்து ஐ.நா இலங்கைமீது முன்வைத்த குற்றச்சாட்டாகும்.
அதிகளவான ஆண்கள் கொல்லப்பட்ட இடமாக முல்லைத்தீவை சொல்லுகிற ஐ.நா, அதிகளவான விதவைப் பெண்கள் வசிக்கும் மாவட்டமாக முல்லைத்தீவை சொல்லுகிற ஐ.நா, அவர்கள் இனவழிப்பினால் தான் இத்தகைய நிலையை அடைந்தார்கள் என்பதை மாத்திரம் சொல்லாமல் தவிர்ப்பதும் இருப்பதும் தான் ஐ.நா போன்ற அமைப்புக்கள் ஈழப் பெண்களின் துயரத்திற்கு காரணமாய் இருப்பதாகும்.
அத்துடன் இதுவே உலகளவில் பெண்களின் வீழ்ச்சி நிலைகளுக்கும் துயர நிலைகளுக்கும் காரணமாயும் அமைந்துவிடுகிறது. இராணுவத்தால் நிரப்பப்பட்ட வடக்கு கிழக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் அவலங்களும் இன்று மிகுந்த சிக்கல் கொண்டவை.
பெண்போராளிகள் காவல் செய்த நிலத்தில், விடுதலை அமைப்பை சிதைத்த பிறகான சூழல் என்பது மிகவும் நெருக்கடியாக இருக்கிறது. தன்னை சிதைத்த இராணுவச் சிப்பாயை அடையாளம் காட்டுகிற சிறுமியொருத்தின் தேசமாக வடக்கு கிழக்கு இன்று மாறிவிட்டது.
இன்றைய நாள் என்பது நினைவுகளின் வழியாக எமது தேசத்தில் பெண்களின் உரிமையையும் பாதுகாப்பான வாழ்க்கையும் குறித்து கரிசனையும் செயலூக்கமும் துவங்க வேண்டிய நாளாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 09 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.