உச்சமடையும் பதற்றம்! இஸ்ரேலுக்கு ஆதரவாக படையெடுக்கும் அமெரிக்க போர் கப்பல்கள்
இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அமெரிக்கா போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது.
இந்தப் போர் கப்பல்கள் தேவைப்பட்டால் அமெரிக்க மக்களை வெளியேற்ற பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் பிரகடனம்
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் ஜெருசலேமை கைப்பற்றும் நோக்கில் இஸ்ரேல் மீது நேற்று(7) அதிகாலையில் இருந்து ஆயிரக்கணக்கான ரொக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து பதிலடி தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், தனது அதிகாரபூர்வமான போர் பிரகடனத்தை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் இராணுவப்படையினர் பாலஸ்தீனத்தின் மீது தொடர் வான் தாக்குதலை நடத்தி காசா நகரை உருக்குலைத்து வருகின்றனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவு
இந்த மோதலில் இரு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து இருப்பதுடன், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தனது விமானம் தாங்கி போர் கப்பல்களை கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.