இலங்கை சீனாவிற்கு சொந்தமாக மாறும் அபாயம்!!
இன்னும் 10 வருடங்களின் பின்னர் கொழும்பு மாத்திரமல்ல, முழு நாடும் சீனாவிற்கு சொந்தமாக மாறி விடும் என தொழிற்சங்க தலைவர் பெர்னாட் பெர்னாண்டோ ( Bernard Fernando) கூறியுள்ளார்.
அதிகரிக்கும் சீனப் பிரசன்னம் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
''நமது நாட்டின் உள்நாட்டு வளங்களை சீனா பறித்து நம்மை கடனில் தள்ளியுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இவ்வாறான சூழலில் புதிய துறைமுக நகரத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த துறைமுகத்தால் எமது நாட்டிற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
எமது நாட்டில் சீனாவின் உதவியுடன் வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது அதிக எண்ணிக்கையிலான வீதிகள் புனரமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுகின்றன.
ஆனால் அந்த வீதிகளில் வாகனங்கள் ஓட்டுவதற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய நாட்டில் அந்நியச் செலாவணி இல்லாத நிலை காணப்படுகிறது.
இந்த துறைமுக நகரம் நாட்டின் ஏழை மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரவில்லை. இதனால் சீனர்களுக்கே பயன் கிடைக்கின்றது.
இன்று இந்தப் பகுதிகளில் சீனர்களையே அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது” என்றார்.
