இலங்கை எரிபொருள் விலை தீர்மானம்! மத்திய கிழக்கு நிலைமைகள் குறித்து எச்சரிக்கை
மத்திய கிழக்கு போர் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்தால், இலங்கையில் எரிபொருள் விலைகள் கணிசமாக உயரும் என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(06.04.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய அவர்,
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் இலங்கை நுகர்வோரும் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என்றார்.
உலக சந்தை
தற்போதைய உலக சந்தை நிலவரப்படி, இலங்கையில் ஒரு லீட்டர் டீசல் விலை சுமார் 600 ரூபாய் அளவுக்கு உயர வேண்டிய நிலை உள்ளது. வரிகள் மற்றும் இலாப வீதத்தை உள்ளடக்கிய இந்த விலை, தற்போதைய விற்பனை விலையுடன் ஒப்பிடும்போது அரசு நட்டத்தில் விற்பனை செய்வது போல் தெரிவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் தனியார் எரிபொருள் நிறுவனங்களின் சுப்பர் டீசல் விலையும் இதை உறுதிப்படுத்துவதாகக் கூறினார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு இரு முக்கிய தீர்வுகளை அவர் முன்வைத்துள்ளார்.
குறிப்பாக சந்தை விலைக்கு ஏற்ப உள்நாட்டு விலைகளை அனுமதிப்பது இதனால் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மேலும் அதிகரிக்கும்.இது உற்பத்திச் செலவை உயர்த்தி, அரிசி முதல் கொத்து ரொட்டி, முட்டை ரொட்டி வரை அனைத்து உணவுப் பொருட்களின் விலையையும் வேகமாக உயரச் செய்யும்.
அரசின் 900 பில்லியன் ரூபாய் சேமிப்பிலிருந்து மானியம் வழங்குவது டீசலுக்கு 100 ரூபாய், பெற்றோலுக்கு 20 ரூபாய் மானியம் வழங்கினால், சேமிப்பு விரைவில் தீர்ந்துவிடும்.
போர் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாத நிலையில் இது ஆபத்தானது என தனநாத் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறந்த தீர்வு
பொருளாதார ரீதியாக சந்தை விலைக்கு ஏற்ப விலைகளை மாற்ற அனுமதிப்பதே சரியானது என்று தனநாத் பெர்னாண்டோ கூறினார். ஆனால் ஏழை மக்களுக்கு அஸ்வெசும போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் நேரடி மானியம் வழங்க வேண்டும்.

ஒட்டுமொத்த எரிபொருளுக்கும் மானியம் வழங்குவது பெரும்பாலும் வசதி படைத்தவர்களுக்கே பயனளிக்கும் என்பதால், இது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
பரந்த பாதிப்புகள் எரிபொருள் விலை உயர்வு உரங்களின் விலையையும் அதிகரித்து, அடுத்த போக விவசாய உற்பத்தியைப் பாதிக்கும். மக்களின் செலவு குறையும் போது பொருளாதார வளர்ச்சி மந்தமடையும்.
மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பண அனுப்புதல்கள் குறைய வாய்ப்புள்ளதால் அந்நியச் செலாவணி கையிருப்பும் பாதிக்கப்படலாம்.
இதன்படி போர் மேலும் நீடித்தால் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களில் மாற்றங்கள் தேவைப்படும் என்பதால், அரசு இப்போதிலிருந்தே முன்கூட்டிய தயாரிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அத்தோடு, மத்திய கிழக்கு போரானது தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 3 மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசாங்கம் இப்போதிருந்தே புத்திசாலித்தனமாக முன்கூட்டியே தயாராக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |