இனப்படுகொலை நடந்தமையால்தான் விசாரணைக்கு அஞ்சுகிறதா இலங்கை!
இலங்கையை ஆட்சி செய்கின்ற எவராக இருந்தாலும் சர்வதேச விசாரணை என்றவுடன் பதற்றமடைவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
சில குற்றவாளிகள் காவல்துறை, கைது, விசாரணை என்றால் அச்சமும் பதற்றமும் கொண்டு நிலைகுலைவதைப் போல இலங்கையை ஆளுகின்ற ஆட்சியாளர்களும் பீதி கொள்ளுவதைப் பார்க்கின்றோம்.
மடியில் கனமிருந்தால் வழியில் பயம் இருக்கும் என்ற தமிழ்மொழியின் பழமொழிக்கு இணங்க இவர்கள் இனப்படுகொலை விசாரணைக்கு அச்சமடைகின்றனரா? எதுவாக இருந்தாலும் உரிய விசாரணைகளின் வழியாக எதிர்கொண்டு உண்மையை நிரூபிக்க கவேண்டுமல்லவா?
யாழ். பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு
இனப்படுகொலை நடந்தமையால்தான் சிறிலங்கா அரசு இனப்படுகொலைக்கு அஞ்சுகிறதா? என்ற கேள்வியே எழுகிறது.
சர்வதேச விசாரணைக்கு வாருங்கள்
“கனேடியப் பிரதமரின் ‘இனப்படுகொலை’ குற்றச்சாட்டு மற்றும் அதனுடன் தொடர்புடைய சர்ச்சைகளைப் பொறுத்தமட்டில், அவை எவ்வித ஆதாரங்களுமற்ற குற்றச்சாட்டுக்கள் என்று கூறுவதன் ஊடாக மாத்திரம் அதனைத் தடுக்கமுடியாது.
மாறாக அவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை மேற்கொள்வதன் மூலமே அதனைத் தவறான குற்றச்சாட்டென நிரூபிக்கமுடியும்” என சவுதி அரேபியாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும், தேசிய சமாதானப்பேரவையின் பணிப்பாளருமான ஜாவித் யூசுஃப் கூறியிருக்கிறார்.
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்ற பெருத்த நம்பிக்கையுடன் அவர் இவ்வாறு கூறியிருந்தாலும், உரிய விசாரணை நடாத்தி அதனை நிரூபிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜாவித் யூசுஃப் அவர்கள், சர்வதேச விசாரணைக்கு இலங்கை செல்ல வேண்டும் என்று குறிப்பிடவில்லை. எனினும் அவர் சர்வதேச விசாரணையை ஏற்க வேண்டும். சர்வதேச விசாரணைக்கு முதலில் இடமளியுங்கள் என்று யூசுஃப் வலியுறுத்த வேண்டும்.
கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை வாயிலாக ஒன்றரை லட்சம் மக்கள் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். வரலாறு முழுவதும் ஈழத் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலைகளின் ஊடாக பல இலட்சம் ஈழத் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் காலத்தில் பெருந்தொகையான மக்கள் இனப்படுகொலை நோக்கில் கொன்றழிக்கப்பட்டனர்.
ஈழத் தமிழ் மக்களின் வாழ்விலும் வரலாற்றிலும் இந்த தாக்கத்தில் இருந்து மீள முடியாத நிலையே நீடித்து வருகின்றது.
இலங்கைக்குள் நீதியா?
போர் நடைபெற்று 14 வருடங்களை கடந்து விட்ட நிலையில், இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் நீதிக்காக போராடி வருகின்றனர்.
போரில் கொல்லப்பட்டவர்களின் உறவுகள், போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், போரினால் உடல், உளக் காயங்களுக்கு உள்ளான மக்கள் என்று ஈழத்தில் கடந்த 14 ஆண்டுகளாக இனப்படுகொலைக்கான நீதிக்காக மக்கள் போராடி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் போது இனப்படுகொலைக்கான விசாரணையை ஈழத் தமிழர்கள் ஒரே குரலில் வலியுறுத்தி வருகிறார்கள்.
அத்துடன் நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் மக்கள் மிக இறுக்கமாக வலியுறுத்துகின்றனர். ஆனால் சிறிலங்கா அரசோ சர்வதேச விசாரணை என்ற பேச்சுக்கு இடமில்லை என்று உடும்புப் பிடியாக மறுத்து வருகின்றது.
ஆனால் ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இலங்கை்குள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் அவர்கள் கொண்டிருக்கவில்லை.
இலங்கையில நீதித்துறை என்பது பேரினவாத அரசுக்கும் பேரினவாதிகளுக்கும் சார்பானது என்பதுடன் ஈழத் தமிழ் மக்கள்மீது இனப்படுகொலையை தொடர நீதித்துறை கருவியாகவும் காவலாகவும் செயற்படுகிறது என்ற தெளிந்த பார்வையும் நிலைப்பாடுமே ஈழ மக்களிடம் உண்டு.
உலகத்திற்கே வெளிச்சம்
இலங்கையின் நீதித்துறையின் உண்மை நிலையை அண்மையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி. சரவணராஜா உலகத்திற்கே வெளிச்சம் இட்டுக் காட்டியுள்ளார்.
முல்லைத்தீவு குருந்தூர் மலை என்ற ஈழச் சைவத் தொன்மையிடம் குறித்த விவகாரத்தில் அவர், வழக்குகளை ஆராய்ந்து உண்மைக்கு உகந்த வகையில் வழங்கிய தீர்ப்பை மாற்றுமாறு பேரினவாதிகள் அவருக்கு கொடுத்த அழுத்தம் உலக அளவில் அம்பலமாகியுள்ளது.
இலங்கை அரசின் அமைச்சர் சரத் வீரசேகர என்பவர் அரசின் உயர் சபையான நாடாளுமன்றத்தில் இருந்தே நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்திப் பேசியமை இலங்கையில் தான் நிகழ்ந்தது.
ஆசியாவின் ஆச்சரியமாக மட்டுமின்றி உலக ஆச்சரியமுமானது. அத்துடன் நீதிபதி ரி. சரவணராஜாவை சட்டமா அதிபர் அழைத்து நீதிமன்ற தீர்ப்பினை மாற்றியமைக்குமாறு அழுத்தம் கொடுத்துள்ளார். அத்துடன் நீதிபதி சரவணராஜாவின் காவல்துறை பாதுகாப்பு குறைக்கப்பட்டதுடன், அவர்மீது இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் அதிகப்படுத்தப்பட்டதாக தனது பதவி விலகல் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தாம் மிகவும் நேசித்த நீதிபதி பதவியை விட்டு விலகி வெளிநாடு ஒன்றுக்கு உயிரை பாதுகாக்க தஞ்சம் புகுந்துள்ளார்.
நீதிபதி ஒருவர் உயிரை காக்க வெளிநாட்டுக்கு தப்பி ஓடுகின்ற நாட்டில் எப்படி நீதி இருக்கும்? எப்படி சாதாரண மக்களின் நிலை இருக்கும்? எப்படி ஈழத் தமிழ் மக்கள் சிறிலங்காவின் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளத்தான் இயலும்?
ரணிலின் பதற்றம் இதற்கா?
அண்மையில் ஜெர்மனிய நாட்டுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணம் செய்திருந்த போது அந்நாட்டின் தேசிய ஊடகமான DW International செய்தி சேவையின் முதன்மை ஊடகவியலாளர் மார்டீன் ஹக், ஒரு முக்கிய நேர்காணலை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது சனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தியுள்ள ஈஸ்டர் படுகொலை குறித்த ஆவணப்படம் தொடர்பில் நடந்தது என்ன என்ற உண்மைகளை ஆராயும் விதமாக மார்டீன் ஹக் கேள்விகளை தொடுத்தார்.
ஆனால் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க மிகுந்த பதற்றம் கொண்டு பீதி கொண்டு ஊடகவியலாளரை கேள்வி கேட்க விடாமல் தடுத்ததுடன், குறித்த நேர்காணலை முற்றாக எதிர்கொள்ளாமல் திணறினார்.
அதிலும் சர்வதேச விசாரணை என்ற விடயத்தில் அதிபர் ரணில் அதிக சீற்றமடைந்தார். இலங்கை இழைத்த இனப்படுகொலைக் குற்றங்களை பாதுகாக்க ரணில், ஹிட்லரையும் பேச்சில் இழுத்துவிட்டார்.
அதாவது சனல் 4 தொலைக்காட்சி ஈஸ்டர் படுகொலைக்காக சர்வதேச விசாரணையை கோரினால் அடுத்த கேள்வியும் கோரிக்கையும் ஈழ இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்று வந்துவிடும் என்பதற்காகவே ரணில் பதற்றம் அடைந்தார்.
அத்துடன், ஈஸ்டர்படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளிகளே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் குற்றவாளிகளாகவும் உள்ளனர்.
அவர்களின் ஆதரவில், அவர்களின் தயவில் ஆட்சிக்கு வந்தமையால் ரணில் அவர்களை காக்க முற்படுகிறார்.
இனப்படுகொலைக்கான நீதி
ஈஸ்டர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை சிங்கள மக்கள் வலியுறுத்துகிறார்கள். சனல் 4 ஆவணப்படத்தில் தனது கருத்துக்களையும் வேண்டுதல்களையும் முன்வைத்த கிறிஸ்தவ மதருகு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள், ஈஸ்டர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தி உள்ளார்.
அத்துடன் இலங்கைக்குள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்றும் சர்வதேச விசாரணை தேவை என்றும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கூறியுள்ளார்.
அதேபோன்று முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் சர்வதேச விசாரணை ஈஸ்டர்படுகொலையின் உண்மைகளை அறிய அவசியம் என்று கூறியுள்ளார்.
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரினால் தேசத்துரோகம் என்று கூறிய ராஜபக்சவினர்தான், ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக இனப் படுகொலைகைள தாராளமாக நிகழ்த்தியதுடன், தென்னிலங்கையிலும் ஈஸ்டர் நாளில் குண்டுகளை வெடிக்கச் செய்து மக்களை படுகொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினர்.
அவர்கள் இழைத்ததுவே தேசத் துரோகம். சிங்கள தேசத்திலும் குண்டுகளை வெடிக்கச் செய்த அவர்களே தேசம் துரோகம் இழைத்துள்ளனர்.
ஒடுக்குமுறைக்கு எதிராக நியாயமான கோரிக்கைகளுடன் சரியான பாதையில் போராடிய ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த சிறிலங்கா ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
அதற்கு சர்வதேச விசாரணை அவசியம். இனப்படுகொலையின் நீதியில்தான் ஈழத் தமிழ் மக்களின் அமைதியும் விடியலும் இருக்கிறது
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 16 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.