தமிழர்களுடைய காணிகளை சவீகரிக்கும் சிறிலங்கா அரசாங்கம் - அங்கஜன் விசனம்
எமது மக்களுடைய காணிகளை காடுகளாக மாற்றி காணி பிடிப்பதுதான் தற்போது இடம்பெறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நேற்று (02) இடம்பெற்ற வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.
காணிப்பிரச்சினை

மேலும் உரையாற்றிய அவர், “எமது மக்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளில், காணிப்பிரச்சினையும் பிரதானமானது. எமது மக்களின் பூர்வீக நிலங்கள் பல திணைக்களங்களால், பல நபர்களால், பல வடிவங்களில் ஒரு நிகழ்ச்சிநிரலில் சூறையாடப்படுகின்றன.
தற்போதைய பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள உணவுத்தட்டுப்பாட்டை தவிர்க்க இலங்கையின் 30% நிலப்பரப்பை கொண்ட வட கிழக்கின் விவசாயத்தின் மூலம், உணவு உற்பத்தியை அதிகரித்து, நாட்டின் உணவுத்தட்டுப்பாட்டை தீர்க்க வாய்ப்புகள் உள்ளன.
இருந்தும் ஒரு சில தரப்பினருடைய அசமந்த போக்கினால் மாவட்ட, மாகாண, அல்லது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் பயன்படாமல் வீணடிக்கப்படுகிறது.
யுத்தம் நடந்த பகுதியாக இருந்தாலும் அழிக்கப்படாத காடுகள் வடக்கில் இன்றும் உள்ளன. அவற்றை பாதுகாப்பதை விட இப்போது மக்களுடைய காணிகளை காடுகளாக மாற்றி காணி பிடிப்பதுதான் இடம்பெறுகிறது.
இவற்றை தீர்க்க நாம் ஆராய்ந்த பொழுது, Google Map / GPS முறையில் காணிகளை அடையாளப்படுத்துவதே தவறு ஏற்பட காரணமென பல கூட்டங்களில் உணரப்பட்டது.
திட்டமிட்ட குடியேற்றங்கள்

கடந்த காலங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மணலாற்றில் நடந்ததை போன்று தற்போதைய வனப்பாதுகாப்பு ரீதியான காணி அபகரிப்புகள் மீதும் மக்களுக்கு அச்சம் உள்ளது.
அவை விடுவிக்கப்படும் என காலத்துக்கு காலம் மாறும் அத்தனை அரசாங்கமும் அதன் அமைச்சர்களும் சொல்லிக் கொண்டாலும் முழுமையாக தீரவில்லை. கடந்த காலங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரடியாக யாழ். மாவட்டத்துக்கு வருகைதந்த போதும், இவ்விடயங்கள் தெரிவிக்கப்பட்டும், இன்னும் தீர்வுகள் இல்லை.
அவற்றை செயற்படுத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் அசமந்த போக்கே இதற்கு காரணமாகும். கடந்த ஆண்டு நீதிக்கான அணுகல் சந்திப்பின்போதும் எமது வலிவடக்கு, மருதங்கேணி, நெடுந்தீவு, முல்லைத்தீவு பிரதேச செயலாளர்களால் இவ்விடயத்தின் அவசியம் கூறப்பட்டது.
துறை சார்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் அதனை ஏற்று, அதற்கான நிவர்த்தியை செய்ய கால அவகாசம் கோரியும் அரசியல் குழப்ப நிலை அதை மேலும் நீடித்துள்ளது” என்றார்.