இந்திய கடற்தொழிலாளர்களை இரும்பு கம்பியால் தாக்கிய இலங்கை கடற்படை!
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய கடற்தொழிலாளர்களின் படகை இலங்கை கடற்படையின் கப்பல் மோதி சேதப்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டு பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்தொழிலாளர்கள் கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையானது ஒரு விசைப்படகின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளது.
கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல்
இதையடுத்து படகில் இருந்த நான்கு கடற்தொழிலாளர்கள் மீது கம்பியால் தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த குறித்த கடற்தொழிலாளர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பி உள்ளனர்.
மேலும் தொடர்ச்சியாக இலங்கை கடற்படை ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்களை தாக்குவதும் கைது செய்வதும் தொடர்கதையாக நடைபெற்று வருவதால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |