மகிந்தவை முந்திக்கொண்ட கோட்டாபய! விறுவிறுப்பாகும் கொழும்பு அரசியல்
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை தயாரிப்பில் அர்ப்பணிப்புடன் மதிப்பான பணியை நிறைவேற்றிய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பாராட்டு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் அறிக்கை தற்போது அரச தலைவரின் செயலகத்திற்கு கிடைத்துள்ளதாக அரச தலைவரின் செயலாளர் காமினி செனரத்ன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான முடிவு செய்யும் நோக்கில் அரசாங்கம் அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்காக அர்ப்பணிப்புடன் மதிப்பான பணியை நிறைவேற்றிய குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு கோட்டாபய பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் காமினி செனரத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவரின் அதிகாரங்களை குறைக்கும் யோசனைகள் அடங்கிய அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று மாலை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமாக பிரதமர் இதனை அமைச்சரவையில் தாக்கல் செய்ய உள்ளார். அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு அரச தலைவரின் மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்த யோசனை அமைச்சரவையில் தாக்கல் செய்யும் முன்னர், அரச தலைவரும் பிரதமரும் நேரடியாக சந்தித்து பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலைமையில், அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான குழுவின் யோசனை தமக்கு கிடைத்திருப்பதாக அரச தலைவரின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
