நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய! சூடுபிடிக்கும் அடுத்த சிறிலங்கா அதிபர் விவகாரம்
சிறிலங்கா அதிபர் விவகாரம்
சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ச, இன்று புதன்கிழமை அதிகாலை நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்கு சென்றதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந் நிலையில், சிறிலங்கா அதிபரின் பதவி விலகல் நாட்டில் ஒரு அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா அதிபர் பதவிக்கான தேர்தல்
இந் நிலையில் சிறிலங்கா அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் ஜூலை 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர்கள் இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒருமித்து முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கோட்டாபய பதவி விலகி இரண்டு நாட்களுக்குப் பின்னர் எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு இலங்கைக் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெற்றிடத்தை நிரப்புவதற்காய் பலத்த போட்டி
நாட்டை மீட்டு எடுக்க அரசியல், பொருளாதாரம் சார்ந்து திறமையாக ஒரு செயல்படும் அரசாங்கம் தேவையாக உள்ளதாகவும் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காய் பலத்த போட்டி நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந் நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயரும் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பான்மையானவர்கள் பொன்சேகாவுக்கு தலைமைத்துவத்தை வழங்க தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அரச அதிபர் அல்லது பிரதமர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.
முன்னாள் அரச அதிபர் மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் அரச அதிபராக நியமிக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், இந்த பதவிகளுக்கு பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை நியமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முன்வந்துள்ளது.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸை அரச அதிபர் பதவிக்கு நியமிப்பதற்கு மூன்று முன்னாள் ஆளுநர்கள் யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அவர்களின் பெரும்பான்மை அடிப்படையில் அரச அதிபர் நியமனம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய சிறிலங்கா அதிபராக தெரிவு செய்யப்படுபவர்கள் 2024ம் ஆண்டின் பிற்பகுதி வரை சிறிலங்கா அதிபராக செயற்பட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)