போராட்டங்களுடன் இணைந்த இராஜதந்திர நகர்வு தமிழ்த் தரப்புகளிடம் இல்லை..!
"வெறும் தேர்தல் அரசியலும், வெற்றுக் கோச போராட்டங்களும், ஆங்காங்கே கத்திக் கலைவதுமாக நடக்கிறதே தவிர தமிழ் தேசிய தரப்பினரிடம் போராட்டங்களுடன் இணைந்த ஒரு இராஜதந்திர நகர்வு எதுவும் இல்லை."
இவ்வாறு, வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் தரப்புக்கள்
குறித்த அறிக்கையில்,
"ஆயுதப்போராட்டம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்து விட்டது, அதன்பின்னர் தமிழர் தரப்பிடம் போராட்டங்களுடன் இணைந்த இராஜதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனமாக உள்ளது.
தமிழர் தரப்பாக ஒன்றுபட்டு போராட வேண்டிய தருணத்தில், மற்றுமொரு தரப்பு ஒன்றுபடும் தரப்புக்களை விமர்சிக்கும் நிலை காணப்படுகிறது, இது தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியான பின்னடைவை தருகிறது.
தமிழர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமானால் உள் நாட்டு ஆட்சியாளர்களை தொடர்ந்து நம்புவது தமிழர் தரப்பின் பலவீனம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், சர்வதேச ரீதியான அழுத்தங்களை இலங்கை அரசு மீது ஏற்படுத்தும் இராஐதந்திர நகர்வுகளை தாயக புலம்பெயர் தரப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளவில்லை.
அறிக்கை ரீதியில் இனப்படுகொலை , சர்வசன வாக்கெடுப்பு, சமஷ்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற விடயங்களை பற்றி பேசினாலும், இதனை அடைவதற்கான பொறிமுறைகள், இராஐதந்திர நகர்வுகளை மேற்கொள்வதற்கு தமிழ் தரப்புக்கள் தவறிவிட்டன.
இராஜதந்திர நகர்வு
இலங்கையில் நடந்தது தமிழினப் இனப்படுகொலை தான் என்பதை ஒரு நாடு அங்கீகரிப்பதற்கான உரிய செயல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளாமையே இலங்கை அரசாங்கம் உள்ளக பொறிமுறை என காலத்தை கடத்துவதுடன், நீதியை நீர்த்துப் போகவும் செய்ய வழிவகுக்கிறது.
அரசியல் அதிகாரத்தின் மூலம் தான் தமிழர் தாயகத்தில் உள்ள இருப்புக்களை தக்க வைக்க முடியும் என்ற உண்மையை விளங்கியும் வெற்றுக் கோசம் இடுவதையே சில தரப்புக்கள் முதன்மைப்படுத்துகின்றனர்.
கடந்த காலத்தில் இனப்பிரச்சினை தொடர்பாக முன்னெடுத்த அத்தனை போராட்டங்களிலும் எந்தத் தவறுகள் காரணமாக பின்னடைவைச் சந்தித்தோம் அல்லது அதிகார சக்திகளை எப்படி கையாள தவறினோம் என்பதை மீள் பரிசீலனை செய்தால் அதுவே பிரச்சினைக்கு சரியான பாதையைக் காட்டும், இதனைத் தமிழர் தரப்பு இராஐதந்திர ரீதியாக இதுவரை கையாளவில்லை.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக தமிழர் தரப்பு முன்னெடுக்கின்ற உறுதியான இராஐதந்திர நகர்வே தாயக இருப்பை பாதுகாக்கவும், நீதியை பெற்றுக்கொள்ளவும் முடியும்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
